பாசெல்: ஐரோப்பிய கோப்பை போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் முதல் முறையாக அரை இறுதிக்கு முன்னேறியுள்ள துருக்கியும், வலுவான ஜெர்மனியும் மோதுகின்றன.
ஐரோப்பிய கோப்பை கால்பந்து திருவிழாவின் அரைஇறுதி கொண்டாட்டம் இன்று தொடங்குகிறது. சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரின், செயின்ட் ஜேக்கப்ஸ் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்குத் தொடங்குகிறது.
இப்போட்டியில் ஜெர்மனியும், துருக்கியும் மோதுகின்றன. துருக்கி அணி முதல்முறையாக ஐரோப்பிய கோப்பை அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஜெர்மனி வலுவான நிலையில் உள்ள நிலையில், துருக்கி அணிக்கு பல பிரச்சினைகள். முன்னணி வீரர்களான டுன்கே சலி, நிஹத் கவேசி, எம்ரே அசிக், எம்ரே கங்கர், சேவத் செடின், அர்டா துரான் ஆகியோர் அணியில் இடம் பெற முடியாத நிலை. காயம் காரணமாக இவர்கள் அரை இறுதிப் போட்டியில் இடம் பெறமாட்டார்கள்.
இதனால் துருக்கி பயிற்சியாளர் பதி டெரிம் படுகவலையுடன் உள்ளார். அரை இறுதிக்கு முதல் முறையாக முன்னேறியுள்ள நிலையில் முன்னணி வீரர்கள் இடம் பெற முடியாமல் போனது அவரை பெரும்வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் மறுபுறமோ ஜெர்மனி அணி வலுவாகவும், தெம்பாகவும் காணப்படுகிறது. கேப்டன் பாலக், பார்வர்ட் வீரர் மிரஸ்லோவ் குளோஸ், ஜென்ஸ் லெஹ்மான், பாஸ்டியன் ஷூவென்ஸ்டீகர், பெர் மெர்ட்செக்கர், கிறிஸ்டோப் மெட்ஸெல்டர், லூகாஸ் பொடோல்ஸ்கி என அனைவருமே பக்காவான நிலையில் போட்டிக்கு ஆயத்தமாக உள்ளதால், எங்களுக்கு வெற்றி நிச்சயம் என அந்த அணியின் பயிற்சியாளர் ஜோக்கிம் லோயு நம்பிக்கையுடன் கூறுகிறார்.
ஜெர்மனியும், துருக்கியும் இதுவரை 17 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஜெர்மனி 11 போட்டிகளில் வென்றுள்ளது. 3 வெற்றிகளைப் பெற்றுள்ளது துருக்கி. 3 போட்டிகள் டிரா ஆகியுள்ளன. ஜெர்மனி சார்பில் 40 கோல்கள் போடப்பட்டுள்ளன. ஆனால் துருக்கியோ ஜெர்மனிக்கு எதிராக 10 கோல்களை மட்டுமே அடித்துள்ளது.
ஜெர்மனி அணியின் நட்சத்திர வீரராக குளோஸ் விளங்குகிறார். துருக்கி அணியின் துருப்புச் சீட்டு, கோல் கீப்பர் ரஸ்து ரெசிபர்.
பாசெல் நகரில் குவிந்திருக்கும் கால்பந்து ரசிகர்கள், வெல்லப் போவது ஜெர்மனியா, துருக்கியா என்பதை அறிய ஆவலுடன் காத்துள்ளனர்.