மைதானத்துக்கு வாங்க... சேத்ரியின் உருக்கமான வேண்டுகோள்.... குவியும் வீரர்கள் ஆதரவு!
Recommended Video

மும்பை: கால்பந்து போட்டிகளை பார்ப்பதற்கு மைதானத்துக்கு வரும்படி, ரசிகர்களுக்கு இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அவருடைய வேண்டுகோளுக்கு பல்வேறு விளையாட்டு வீரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டிகள் மும்பையில் நடக்கின்றன. கண்டங்களுக்கு இடையேயான இந்த போட்டியில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து, சீன தைபே அணிகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டியின்போது, உலக அளவில் விளையாடி வரும் வீரர்களில் அதிக கோல் அடித்தோர் பட்டியலில் மூன்றாவது இடத்தை, இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி பெற்றார்.
மேலும் கென்யாவுக்கு எதிராக இன்று நடக்கும் ஆட்டம் சேத்ரிக்கு 100வது போட்டியாகும். இந்திய அளவில் 100 போட்டிகளில் பங்கேற்கும் இரண்டாவது வீரராகிறார் சேத்ரி. பாய்சுங் பூட்டியா 104 போட்டிகளில் பங்கேற்று 40 கோல்களை அடித்துள்ளார்.
ரசிகர்களுக்கு கோரிக்கை
மும்பையில் நடக்கும் கால்பந்து போட்டிகளை பார்க்க வரும்படி ரசிகர்களுக்கு சுனில் சேத்ரி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில், கால்பந்து போட்டிகளை பார்க்க ரசிகர்கள் மைதானத்துக்கு வர வேண்டும். எங்களுக்காக குரல் கொடுங்கள், எங்களை திட்டுங்கள், ஆனால், மைதானத்துக்கு வாருங்கள். இரு வீரர்களுக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கும் என்று அந்த வீடியோவில் சேத்ரி உருக்கமாக கூறியுள்ளார்.
சேத்ரிக்கு ஆதரவு
இந்த வீடியோ வெளியானதும் பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். முதல் ஆளாக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, டுவிட்டரில் கோரிக்கை வைத்துள்ளார். நமது நண்பர் சுனில் சேத்ரிக்கு நாம் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். ரசிகர்கள் ஆதரவு இருந்தால்தான் வீரர்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்று தான் வெளியிட்டுள்ள வீடியோவில் கோஹ்லி கூறியுள்ளார்.
பக்கபலமாக இருங்கள்
கிரிக்கெட்டின் கடவுளான சச்சின் டெண்டுல்கரும் மிக உருக்கமான வேண்டுகோளுடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நமது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வீரர்களை நாம் கவுரவிக்க வேண்டும். எந்த விளையாட்டாக இருந்தாலும், அதை மைதானத்தில் நேரில் பார்த்து, வீரர்களை நாம் ஊக்கவிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நமது வீரர்களுக்கு அது மிகப் பெரிய பலமாக இருக்கும் என்று சச்சின் கூறியுள்ளார்.
கைகொடுக்கும் ரெய்னா
சேத்ரியின் டுவிட்டர் வீடியோவுக்கு கிரிக்கெட் வீரரான சின்ன தல சுரேஷ் ரெய்னாவும் பதில் பதிவிட்டுள்ளார். நான் ஒரு கால்பந்து ரசிகன். நமது கேப்டன் சேத்ரி மற்றும் அணிக்கு ஒவ்வொருவரும் ஆதரவு அளிக்க வேண்டும். மிகச் சிறந்த முறையில் முன்னேறி வரும் இந்திய கால்பந்து அணிக்கு ஒவ்வொருவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ரெய்னா கூறியுள்ளார்.
டிக்கெட் கேட்ட சானியா
கிரிக்கெட் வீரர்களைத் தொடர்ந்து டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் தனது ஆதரவு கரத்தை நீட்டியுள்ளார். லெஜன்ட் எனக்கு ஒரு டிக்கெட் கிடைக்குமா என்று டுவிட்டரில் கூறியுள்ளார் விரைவில் தயாக உள்ள சானியா.
முன்னாள், இன்னாள் வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இந்திய கால்பந்து அணி விளையாடும் அடுத்த ஆட்டங்களை நேரில் பார்த்து ரசிகர்களும் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புவோம்.


Click it and Unblock the Notifications