ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியிடம் 2 - 1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
பிரேசிலின் டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. கோலாகலமாக துவங்கிய விளையாட்டு திருவிழாவில் இந்தியா சார்பில் 118 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்திய ஹாக்கி அணி ஸ்ரீஜேஷ் தலைமையில் களமிறங்கியுள்ளது.

பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, அயர்லாந்து அணியுடன் சனிக்கிழமை நடந்த போட்டியில் 3-2 என வெற்றி கண்டது. இந்நிலையில் இன்று ஜெர்மனி அணியுடன் இந்திய அணி மோதியது.
போட்டியின் 18வது நிமிடத்தில் ஜெர்மனியின் நிக்லஸ் வாலன் முதல் கோல் அடித்தார். 23 வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனல்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய ருபிந்தர் சிங் கோலாக மாற்றினார்.
இதனால் இரு அணிகளும் 1- 1 என சமநிலையில் இருந்தது. ஆட்டம் முடிவடைய 3.1 வினாடிகள் இருந்த நிலையில், ஜெர்மனி அணி 2வது கோல் அடித்து வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.