ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான ஹாக்கி தொடரை இந்திய அணி 2-0 என வென்றது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஹாக்கி அணி நான்கு போட்டிகள் கொணட் ஹாக்கி டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.
முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்தியா தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் நேற்று ஆக்லாந்தில் நடந்தது.
ஆட்டம் துவக்கத்தில் இருந்தே பரபரப்பாக இருந்தது. இரு அணிகளும் சம வலிமையுடன் மோத முதல் பாதி கோலின்றி சமநிலையில் முடிந்தது.
இரண்டாவது பாதியின் 43வது நிமிடத்தில் திலீப் டிர்க்கி ஒரு கோலடித்து இந்தியாவுக்கு 1-0 என முன்னிலை பெற்று தந்தார். இந்நிலையில் போட்டி முடிவதற்கு மூன்று நிமிடங்கள் மட்டுமே இருந்தநிலையில் கேப்டன் சந்தீப் சிங் ஒரு கோலடிக்க, இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதையடுத்து இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.