சென்னை: சென்னையில் சொந்த மண் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் நடைபெற்ற 2025 புரோ கபடி லீக் போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி கடைசி நிமிடம் வரைப் போராடி, 33-29 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியிடம் நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டது. அர்ஜுன் தேஷ்வாலின் வரலாற்று சாதனை, ரசிகர்களின் ஆரவாரம் என அனைத்தும் வீணாக, கடைசி நிமிடத்தில் சஞ்சய் செய்த ஒரு அட்டகாசமான சூப்பர் டேக்கிள், ஆட்டத்தின் போக்கையே மாற்றி பெங்களூரு புல்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது.
இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே பெங்களூரு புல்ஸ் அணி, ஈரானிய வீரர் அலிரேசா மிர்சாயனின் அட்டகாசமான ரெய்டுகளால் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அவர்களது தடுப்பாட்டமும் வலுவாக இருக்க, தமிழ் தலைவாஸ் அணி ஆரம்பத்தில் சற்றுத் தடுமாறியது.

ஆனால், நிதேஷ் குமார் செய்த ஒரு வலுவான டேக்கிள், தமிழ் தலைவாஸ் அணிக்கு ஆட்டத்தில் முதல் முறையாக முன்னிலை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு ஆட்டத்தின் போக்கு மாறியது. இரு அணிகளும் சளைக்காமல் புள்ளிகளைப் பெற்றன. முதல் பாதி முடிவில், தமிழ் தலைவாஸ் அணி 18-17 என்ற சிறிய முன்னிலையுடன் இருந்தது.
இரண்டாம் பாதியில் ஆட்டம் ஒரு 'சீசா' போட்டி போல மாறி மாறி இரு அணிகளின் பக்கமும் சென்றது. பெங்களூரு புல்ஸ் அணிக்கு அலிரேசா தொடர்ந்து ரெய்டுகளில் புள்ளிகளைக் குவிக்க, தமிழ் தலைவாஸ் அணிக்கு ரோஹித் பெனிவால் தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்தார். இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர ரெய்டர் அர்ஜுன் தேஷ்வால், ப்ரோ கபடி லீக்கில் தனது 1300 புள்ளிகளைப் பதிவு செய்து வரலாற்று மைல்கல்லை எட்டினார். ஆனால், அணியின் தோல்வியால் அவரது சாதனை சோகத்தில் முடிந்தது.
ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில், பெங்களூரு புல்ஸ் அணி 23-21 என இரண்டு புள்ளிகள் முன்னிலை பெற்றது. தீபக் சங்கர், அர்ஜுன் தேஷ்வால் மற்றும் ஹிமான்ஷுவை வெளியேற்றியது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்களில் ஆட்டம் யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக மாறலாம் என்ற நிலையில் சென்று கொண்டிருந்தது. ஆனால், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில், தமிழ் தலைவாஸ் அணி ரெய்டில் புள்ளிகளைப் பெற்று போட்டியை வெல்லும் முனைப்பில் இருந்தபோது, பெங்களூரு புல்ஸ் அணியின் தடுப்பாட்ட வீரர் சஞ்சய் துல் செய்த ஒரு அட்டகாசமான சூப்பர் டேக்கிள், ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றியது.
அந்த ஒரு டேக்கிள், தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றி வாய்ப்பை முழுவதுமாகப் பறித்தது. போட்டியின் முடிவில், பெங்களூரு புல்ஸ் அணி 33-29 என்ற புள்ளிக் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பெங்களூரு புல்ஸ் அணியின் அலிரேசா மிர்சாயன் 'சூப்பர் 10' புள்ளிகளையும், சஞ்சய் 'ஹை ஃபை' (5 டேக்கிள் புள்ளிகள்) பதிவு செய்ததும் முக்கியக் காரணமாகத் இருந்தன. தமிழ் தலைவாஸ் அணி இறுதிவரை போராடியபோதும், கடைசி நிமிடத்தில் செய்த சில தவறுகளும், பெங்களூரு அணியின் அனுபவமும் வெற்றியைத் தட்டிப் பறித்துவிட்டது.