வருவாரா "விஷ்வா பாய்".. காத்திருக்கும் "தலைவாஸ்"!
மும்பை: கில்லி படத்தில், தம் பிடித்து, கபடி, கபடி என்று ஒற்றை ஆளாக தனது அணிக்கு வெற்றியை உறுதி செய்த, நடிகர் விஜய் வந்தால்தான், இனி பிழைக்க முடியும் என்ற அளவுக்கு தமிழ் தலைவாஸ் அணி பரிதாப நிலையில் உள்ளது.
புரோ கபடி லீக், 5வது சீசனில் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து கடைசி இடத்திலேயே உள்ளது. இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள, சச்சின் டெண்டுல்கரின் தமிழ் தலைவாஸ் அணி, ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. 4ல் தோல்வி, 2ல் டை என, 14 புள்ளிகளுடன் உள்ளது. ஏ மண்டலத்தில் தபாங்க் டில்லி அணியும் 14 புள்ளிகளுடன்தான் உள்ளது. ஆனால், 2ல் வெற்றி கண்டுள்ளது.

அணியின் கேப்டனான அஜய் தாகூர், இந்திய அணிக்காக, 2016ல் உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர். மிகச் சிறந்த ரைடரான அஜய் தாகூர் மட்டும் விளையாடினால் போதுமா?
மும்பையில் நேற்று இரவு நடந்த லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் அணியுடன், தமிழ் தலைவாஸ் மோதியது. ஆட்டத்தில் துவக்கத்தில், பைரேஸ்ட் அணியின் பிரதீப் நர்வாலை அவுட்டாக்கி வெளியே அனுப்பியதுடன், சில புள்ளிகளை எடுத்து தமிழ் தலைவாஸ் முன்னிலை பெற்றது. ஆனால், சில நிமிடங்களுக்கு மட்டுமே இது தாக்கு பிடித்தது.
அதன்பிறகு, பாட்னா பைரேட்ஸ் அணியின் மோனு கோயட், ஜெய்தீப் ஆகியோர் தொடர்ந்து புள்ளிகளை எடுத்து, அணி முன்னிலையிலேயே இருப்பதை உறுதி செய்தனர்.
முதல் பாதியின் இறுதியில், 16-9 என்று பாட்னா பைரேட்ஸ் முன்னிலை பெற்றது. அஜய் தாகூர் சிறப்பாக விளையாடி, 10 புள்ளிகள் எடுத்தார். ஆனால், அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இறுதியில், 35-24 என, பாட்னா ரைடர்ஸ் அணி வென்றது.
மற்றொரு பரபரப்பான ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி 26-24 என்ற புள்ளியில் யு மும்பா அணியை வென்றது.
Story first published: Sunday, August 27, 2017, 11:19 [IST]
Other articles published on Aug 27, 2017


Click it and Unblock the Notifications