இந்தியாவில் 2030 காமன்வெல்த் தொடர்?.. அகமதாபாத் நகரத்திற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல்
டெல்லி: 2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சியில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2030 காமன்வெல்த் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கான விண்ணப்பத்திற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) தனது அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரம், இந்தப் பிரம்மாண்ட தொடரை நடத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை அன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாக, 2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்த காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிடம் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கு ஒப்புதல் பெறுவதே இருந்தது. கூட்டத்தின் முடிவில், இந்தத் திட்டத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு வாய்ப்பு
24ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் தொடர் 2030ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்தப் தொடரை நடத்த கனடா விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், திடீரெனப் போட்டியிலிருந்து விலகியது. இது இந்தியாவுக்குப் காமன்வெல்த் தொடரை நடத்தும் வாய்ப்பை அதிகரித்து உள்ளது.
இந்தியா ஏற்கனவே இந்த தொடரை நடத்துவதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்து, 'Expression of Interest (EOI)' கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளது. இறுதி கட்ட விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அகமதாபாத்தில் ஆய்வு
தொடரை நடத்துவதற்கான இடமாக அகமதாபாத் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் அதிகாரிகள் குழு சமீபத்தில் அகமதாபாத்திற்கு வருகை தந்தது. கூட்டமைப்பின் விளையாட்டு இயக்குநர் டேரன் ஹால் தலைமையிலான இந்தக் குழு, அகமதாபாத்தில் உள்ள விளையாட்டு அரங்குகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்ததுடன், குஜராத் மாநில அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியது. இந்த மாத இறுதியில் கூட்டமைப்பின் பெரிய குழு ஒன்று மீண்டும் இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பரில் இறுதி முடிவு
தொடரை நடத்தும் நாடு எது என்பது குறித்த இறுதி முடிவு, நவம்பர் மாதம் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்படும். நீடித்த தன்மை, தடகள வீரர்கள் மையம் மற்றும் தொடரை நடத்தும் நாடு மற்றும் இடத்தில் விளையாட்டு சார்ந்த ஈர்ப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்தத் தேர்வு அமையும் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஹர்பால் சிங் தெரிவித்துள்ளார்.
2010க்குப் பிறகு மீண்டும் இந்தியா
இந்தியா இதற்கு முன்பு 2010ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் தொடரை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் பிரம்மாண்ட விளையாட்டு தொடரை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.
2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரை நடத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், 2030 காமன்வெல்த் தொடரை நடத்துவது அந்த இலக்கை அடைவதற்கான ஒரு முக்கிய படியாக அமையும் என விளையாட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications