இந்தியா vs பாகிஸ்தான்.. சரிக்கு சமமாக நடந்த ஸ்குவாஷ் போட்டி.. தங்கம் வென்று சாதித்த இந்திய வீரர்கள்!
ஹாங்சோ: ஆசிய போட்டிகளின் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய ஆடவர் இணை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
சீனாவின் ஆசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 7வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் போட்டிப் போட்டுக் கொண்டு பதக்கங்களை வென்று வருகின்றனர். இன்று காலையிலேயே துப்பாக்கிச்சுடுதல் கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவில் சரப்ஜோத் - திவ்யா இணை வெண்கலம் வென்று அசத்தியது.

அதேபோல் டென்னிஸ் பிரிவின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ருதுஜா கூட்டணி சீனா தைபேவின் ஷாங் ஹாவ் - லியாங் கூட்டணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் முதல் செட்டை 2-6 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய இணை இழந்தது. ஆனால் இதன்பின் சிறப்பாக ஆடிய போபண்ணா - ருதுஜா கூட்டண்இ 6-3 மற்றும் 10-4 என்ற செட் கணக்கில் அடுத்தடுத்து வெற்றிபெற்றது.
இதன் மூலம் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா 9வது தங்கத்தை வென்று அசத்தியது. அதேபோல் ஸ்குவாஷ் பிரிவில் பாகிஸ்தான் அணியின் நூர் சமான், முகமது ஆசிம் அணியை எதிர்த்து இந்தியாவின் மஹீஷ், சவுரவ் கோஷல், அபய் சிங் குழு களமிறங்கியது. இந்தப் போட்டியில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா அபார வெற்றியை பெற்றது.
இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி 10வது தங்கத்தை வென்று அசத்தியது. இதுவரை மொத்தமாக இந்திய வீரர்கள் 10 தங்கம், 13 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது. மொத்தமாக 36 பதக்கங்களை வென்றுள்ளதால், பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி இருப்பதால், இந்திய இணைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications