ஆசிய பாரா ஈட்டி எறிதலில் 3 பதக்கங்களையும் அள்ளிய இந்தியா.. பிரணவ் சூர்மாவும் தங்கம் வென்றார்
நகோயா: ஜப்பான் நாட்டின் நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 3 பதக்கங்களையும் இந்திய வீரர்களே கூண்டோடு அள்ளிச் சென்று உலக அரங்கில் புதிய சாதனை படைத்துள்ளனர். ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் தனது தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்த அதேவேளையில், கிளப் த்ரோ போட்டியில் பிரணவ் சூர்மா புதிய ஆசிய பாரா சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஈட்டி எறிதல் களத்தில் உலக சாம்பியனான சுமித் அன்டிலின் ஆதிக்கத்தை யாராலும் அசைக்க முடியவில்லை. தனது 2-வது முயற்சியிலேயே ஈட்டியை 72.46 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தினார். அவருக்கு அடுத்தபடியாக எஃப்42 பிரிவில் களமிறங்கிய மற்றொரு இந்திய வீரரான மகேந்திர குர்ஜார் 59.03 மீட்டர் தூரம் வீசி புதிய ஆசிய பாரா சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். எஃப்44 பிரிவில் சஞ்சய் சர்கார் 64.48 மீட்டர் தூரம் வீசி ஆசிய விளையாட்டு சாதனையுடன் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் முதல் மூன்று இடங்களையும் பிடித்து தங்கம், வெள்ளி, வெண்கலத்தை வென்றனர்.

மறுபுறம் ஆண்களுக்கான கிளப் த்ரோ எஃப்51 பிரிவு இறுதிப்போட்டியிலும் இந்தியா தங்கம் வென்றது. இதில் பங்கேற்ற இந்தியாவின் பிரணவ் சூர்மா, தனது திறமையை வெளிப்படுத்தி 32.87 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஆசிய பாரா சாதனையுடன் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரரான தர்மபீர் 27.71 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அமித் குமார் 27.26 மீட்டர் தூரத்துடன் 4-வது இடத்தைப் பிடித்தார். தென் கொரியாவின் ஜங் ஜிவோன் 28.40 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
ஒரே நாளில் அடுத்தடுத்து புதிய சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை அள்ளி இந்திய பாரா தடகள வீரர்கள் தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். குறிப்பாக ஈட்டி எறிதலில் முதல் மூன்று இடங்களையும் இந்தியாவே வென்றெடுத்த வரலாற்று சாதனை படைத்துள்ளது.


Click it and Unblock the Notifications

