30 வயதில் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த இந்திய வீராங்கனை சபினேனி மேக்னா
ஹைதராபாத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டர்களில் ஒருவரான சபினேனி மேக்னா, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதான இவர், தனது 10 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இது குறித்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து விளையாடக்கூடிய சூழலில், இவர் திடீரென எடுத்துள்ள இந்த முடிவு ரசிகர்களைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திரா மற்றும் ரயில்வேஸ் அணிகளுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் கலக்கிய மேக்னா, அதிரடி பேட்டிங் மூலம் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். இந்திய அணிக்காக இவர் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார். கடந்த 2022-ல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் தொடங்கிய இவரது பயணம், பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மாறியது. கடந்த 2024-ல் ஆர்சிபி அணி முதல்முறையாக சாம்பியன் கோப்பையை வென்ற போது அந்த அணியில் மேக்னா இடம்பிடித்திருந்தார்.

தனது ஓய்வு குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள மேக்னா, "இந்திய ஜெர்சியை அணிந்து சர்வதேச அரங்கில் பேட் பிடித்து நின்றது எனது வாழ்நாள் கனவாகும். அந்த கனவு நனவானது என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். கிரிக்கெட் மைதானமே எனது 2-வது வீடாக இருந்து எனக்கு தன்னம்பிக்கையையும், பணிவையும் கற்றுக் கொடுத்தது. என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், சக வீராங்கனைகள் மற்றும் பிசிசிஐ, ஆந்திர கிரிக்கெட் சங்கம் ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ஆடுவதில் இருந்து விடைபெற்றாலும் கிரிக்கெட்டுடனான தனது பந்தம் ஒருபோதும் முறியாது என்று மேக்னா தெரிவித்துள்ளார். இளம் தலைமுறை பெண் வீராங்கனைகளை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்வதிலும், அவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் தனது வாழ்நாளை அர்ப்பணிக்கப் போவதாக அவர் கூறியுள்ளார். கிரிக்கெட்டே எனது வாழ்நாள் நோக்கம் என்று கூறி விடைபெற்றுள்ளார் மேக்னா.


Click it and Unblock the Notifications


