சென்னை: 2025 சென்னை கிராண்ட்மாஸ்டர் ஓபன் செஸ் தொடரின் முதல் நாளான நேற்று (ஆகஸ்ட் 7) பரபரப்பான ஆட்டங்கள் அரங்கேறின. மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி மற்றும் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் ஆகியோர் வெற்றியுடன் கணக்கைத் தொடங்கினர். மற்ற முக்கிய ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான அர்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் அவோண்டர் லியாங்கை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜுன், தனது திறமையான காய்களின் நகர்வுகளால் லியாங்கிற்கு அழுத்தம் கொடுத்து வெற்றியையும் பதிவு செய்தார்.
மற்றொரு விறுவிறுப்பான ஆட்டத்தில், ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமர், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் நிஹல் சரினை வீழ்த்தினார். இந்த இரு வெற்றிகளைத் தவிர, மாஸ்டர்ஸ் பிரிவில் நடந்த மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. குறிப்பாக, சென்னையின் கிராண்ட்மாஸ்டர்களான பிரணவ் வி மற்றும் கார்த்திகேயன் முரளி இடையேயான உள்ளூர் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமனில் முடிந்தது. உலகின் முன்னாள் 6-ம் நிலை வீரரான அனிஷ் கிரி, அமெரிக்காவின் ரே ராப்சனுடனும், இந்தியாவின் விதித் குஜராத்தி, நெதர்லாந்தின் ஜோர்டன் வான் ஃபாரஸ்ட்டுடனும் தங்கள் ஆட்டங்களை டிரா செய்தனர்.

சேலஞ்சர்ஸ் பிரிவில், இந்தியாவின் முன்னணி கிராண்ட்மாஸ்டர்களான தீப்தாயன் கோஷ், லியோன் லூக் மெண்டோன்கா மற்றும் எம். பிரனேஷ் ஆகியோர் தங்களது முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கின்றனர். அதே சமயம், தமிழக வீராங்கனை வைஷாலி ரமேஷ்பாபு, அபிமன்யு புராணிக் மற்றும் இனியன் பி ஆகியோர் தங்களது போட்டிகளை டிரா செய்தனர். அனுபவ வீராங்கனையான ஹரிகா துரோணவல்லி மற்றும் ஹர்ஷவர்தன் ஜிபி ஆகியோர் தங்களது முதல் சுற்றில் தோல்வியைச் சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இரண்டாவது சுற்றான இன்று (ஆகஸ்ட் 8) இன்னும் பல விறுவிறுப்பான போட்டிகள் ரசிகர்களுக்காகக் காத்திருக்கின்றன.
இந்தியா தந்த அடி.. ஐசிசி-க்கு பெரிய கும்பிடு போட்ட இங்கிலாந்து.. இரட்டை அடுக்கு முறைக்கு எதிர்ப்பு
முதல் சுற்றில் பெற்ற வெற்றியின் உத்வேகத்துடன் அர்ஜுன் மற்றும் வின்சென்ட் இன்றும் வெற்றியைத் தொடர்வார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல், முதல் சுற்றில் டிரா செய்த மற்றும் தோல்வியடைந்த வீரர்கள் இன்று வெற்றிக் கணக்கைத் தொடங்க வாய்ப்புள்ளது என்பதால், இன்றைய போட்டிகளில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகள் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகின்றன.