Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் சதமடிக்க திணேஷ் விடலையாம்- மாஜி வீரர்கள் கோமாளித்தனமான புகார்!

மும்பை: கட்டாக்கில் இலங்கைக்கு எதிராக நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கரை சதமடிக்க விடாமல் தடுத்து விட்டார் திணேஷ் கார்த்திக் என்று நாடி நரம்புகள் புடைக்க சில ரிட்டையர்டு வீரர்கள் கொந்தளித்துள்ளனர்.

கட்டாக்கில் நடந்த ஒரு நாள் போட்டியில், சச்சின் டெண்டுல்கர் 96 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் திணேஷ் கார்த்திக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அந்தப் போட்டியில் சச்சின் சதம் போட்டிருந்தால், அது அவருக்கு 46வது சதமாக இருந்திருக்கும். ஆனால் அப்படி சதம் போட முடியாமல் போனதற்கு திணேஷ் கார்த்திக்தான் காரணம் என்று சில மாஜி வீரர்கள் மாய்ந்து மாய்ந்து மருகுகின்றனர். இவர்களில் பாதிப் பேர் மகாராஷ்டிரக்காரர்கள்.

முன்னாள் தேர்வுக் குழுத் தலைவரான சந்து போர்டே கூறுகையில், டெண்டுல்கருக்கு சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் தினேஷ் கார்த்திக் ஒருவித பதட்டத்துடன் இருந்தார் என்பதே உண்மை. அனுபவமின்மை மற்றும் சிந்தனையில்லாமல் செயல்பட்டு அவர் தெண்டுல்கரின் சதத்தை வீணடித்து விட்டார் என்று ரொம்ப வருத்தப்பட்டுள்ளார்.

இன்னொரு மகாராஷ்டிரக்காரரான பாபு நட்கர்னி கூறுகையில், டெண்டுல்கர் சதத்தை நெருங்கி கொண்டிருந்த நிலையில் அவருக்கு பேட்டிங் செய்ய தினேஷ் கார்த்திக் அதிக வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருக்க வேண்டும். அந்த நேரத்தில் அவர் சிக்சர் அடித்து இருக்க வேண்டிய தேவையில்லை. அனுபவமின்மையை இது காட்டுகிறது என்று வருந்தியுள்ளார்.

மராத்தி கிரிக்கெட் வீரர்களை அணியில் குவித்து மும்பை அணியாக, இந்திய கிரிக்கெட் அணியை மாற்றிய பெருமைக்குரிய கவாஸ்கர் கூறுகையில், வயது அதிகமாகி கொண்டிருக்கும் வேளையில் டெண்டுல்கர் சதத்தை தவற விட்டு இருக்க கூடாது. 80 ரன்னை தொட்டவுடன் “பேட்டிங் பவர் பிளேயை" எடுத்து இருக்க வேண்டும். அதிகமாக போராட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால் சதம் அடித்து இருக்கலாம் என்று வேதனைப்பட்டுள்ளார்.

முன்னாள் விக்கெட் கீப்பரான கிர்மானி கூறுகையில், டெண்டுல்கர் 90 ரன் எடுத்திருந்த போது கார்த்திக் சிக்சர் அடித்தார். அப்போது அவர் அருகே சென்று டெண்டுல்கர் ஏதோ கூறினார்.

அதன் பின் ஒன்று, இரண்டு ரன்கள் தான் எடுக்கப்பட்டது. உண்மையிலேயே அவரிடம் டெண்டுல்கர் என்ன கூறினார் என்று அவர்களுக்குத்தான் தெரியும் என்று பொத்தாம் பொதுவாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் வீரர் அப்பாஸ் அலி பெய்க் கூறுகையில், டெண்டுல்கர் சதத்தை நெருங்கிய போது தினேஷ் கார்த்திக்கிடம் தனக்கு பேட்டிங் வாய்ப்பு தருமாறு கேட்கவில்லை. சுய நலமில்லாமல் அணிக்காகத் தான் டெண்டுல்கர் விளையாடுகிறார் என்பது இதன் மூலம் நிரூபணமாகியது என்றார்.

முன்னாள் பந்து வீச்சாளர் சேட்டன் செளகான் சற்று நிதானமாக பேசியுள்ளார். அதிக ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் டெண்டுல்கர் சதம் அடிக்கும் வாய்ப்பை தினேஷ் கார்த்திக் விட்டுக் கொடுத்திருக்க வேண்டும், என்றாலும் கார்த்திக்கின் செயலை விமர்சிப்பது சரியல்லை. அந்த சூழ் நிலையில் யாராக இருந்தாலும், அப்படித்தான் செய்வார்கள் என்று கூறியுள்ளார்.

மாஜி வீரர்கள் கூறுவது இருக்கட்டும். சச்சின் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்திய அணி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறதா.?

சச்சின் சாதனை படைக்க முடியாமல் போய் விட்டதே என்று வருந்தும் இந்த முன்னாள் வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்த திணேஷ் கார்த்திக் உள்பட எத்தனையோ திறமையான பல தமிழக வீரர்கள் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படாமல் பந்தாடப்பட்டு வருகிறார்களே, அதுகுறித்து இவர்கள் ஏன் ஒரு முறை கூட விசனப்படவில்லை, வருத்தப்படவில்லை, வேதனைப்படவில்லை, ஆதங்கப்படவிலல்லை.?

ஏதோ டோணிக்கு தடை வந்ததால், திணேஷ் கார்த்திக்குக்கு சற்று அதிர்ஷ்டம் அடித்து ஆட வாய்ப்பும் கிடைத்தது. அதை அவர் பயன்படுத்திக் கொண்டால் தப்பா.?

இந்தப் போட்டியில் ஒரு வேளை திணேஷ் கார்த்திக் சரியாக விளையாடாமல் அவுட் ஆகியிருந்தால், வாய்ப்பு கொடுத்தும் வீணடிச்சுட்டார் என்று கூறி ஆப்பு வைத்திருப்பார்களே, அதைத்தான் இந்த மாஜிக்கள் நியாயப்படுத்த முன்வருகிறார்களா. ?

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ளது. சீனியர் வீரர்களுக்கு வயிறு சரியில்லாமல் போனால், கை கால்களில் அடிபட்டால், தடை விதிக்கப்பட்டால்தான் திறமையான இளம் வீரர்கள் பக்கம் இந்திய தேர்வுக் குழு திரும்பிப் பார்க்கிறது. அப்படி வாய்ப்பு கிடைத்த வீரர்கள் அதை பயன்படுத்திக் கொண்டு ஆடினால் தப்பாப்பா...??

இதற்கு முன்பு சச்சின் 90 ரன்களைத் தாண்டிய நிலையில் 17 முறை அவுட் ஆகியுள்ளார். எனவே இந்த முறையும் அவர் சதம் போட்டிருப்பார் என்று உறுதியாக கூற முடியாத நிலை.

இவர்கள் புலம்பலைப் பார்க்கும்போது சச்சினைத் தவிர மற்ற வீரர்கள் யாருமே இவர்களுக்குத் தேவை இல்லை என்பது போலத் தோன்றுகிறது.

ரொம்பக் கொடுமை சார் இது...!

Story first published: Wednesday, December 7, 2011, 18:34 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+