
எத்தனை பேருக்கு ரிச்சி மெக்காவ்.. குவாட் கூப்பரைத் தெரியும்...?
சச்சினைத் தெரியாது என்று ஷரபோவா கூறியதற்காக திட்டித் தீர்க்கும் நம்மவர்கள் எத்தனை பேருக்கு ரிச்சி மெக்கவா் தெரியும்.. எத்தனை பேருக்கு குவாத் கூப்பரைத் தெரியும்...? இவர்கள் இருவரும் வேறு யாருமல்ல, உலகப் புகழ் பெற்ற ரக்பி வீரர்கள்.. சரி ரக்பி விளையாட்டுப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்.. ரக்பி நம்ம நாட்டில் ஆடப்படுகிறதா என்பதாவது தெரியுமா.. ?

இதெல்லாம் தெரியாட்டி தப்பா...?
இப்படி இவர்கள் குறித்தெல்லாம் ஒருவருக்குத் தெரியாவிட்டால் அவர்களை "அம்மா, மம்மி" என்று திட்டித் தீர்ப்பது சரியா.. நியாயமா.. முறைதானா...?

அத விடுங்க,, இதுக்கு வாங்க
அதையெல்லாம் விடுங்க.. இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் யார் என்று எத்தனை இந்தியர்களுக்குத் தெரியும்.. அதற்காக ஹாக்கி ரசிகர்கள் எல்லாம் தெரியாதவர்களைத் திட்டிக் கொண்டா இருக்கிறார்கள்... இல்லையே... இந்திய கைப்பந்து அணியின் கேப்டன் யார், இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டன் யார்.. எத்தனை பேருக்குத் தெரியும்.. சரி, அதை விடுவோம்.. இந்திய கபடி அணியின் கேப்டன் பெயர் தெரியுமா.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் யாருப்பா.. அதைச் சொல்லுங்க பார்ப்போம்.. தெரியாதுல்ல...!

கிரிக்கெட் மட்டுமே பைத்தியம்
நம்ம நாட்டில் விளையாட்டு ரசிகர்கள் என்றால் அவர்கள் கிரிக்கெட் ரசிகர்கள் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு கிரிக்கெட் மாயை இங்கு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எனவேதான் கிரிக்கெட் வீரர்கள் யாரையாவது இப்படி யாராவது கூறி விட்டால் குமரி முதல் காஷ்மீர் வரை கொந்தளித்து விடுகிறார்கள்.

சச்சினுக்கே பிடிக்காதுப்பா இதெல்லாம்
உண்மையில் தற்போது டெண்டுல்கரின் ரசிகர்கள் அநாகரீகமாக நடந்து கொண்டு வருவதை சச்சினே கூட விரும்ப மாட்டார். உண்மையில் சர்வதேச அளவில் சச்சின் பெயரை இவர்கள் நாறடித்து வருகிறார்கள் என்பதே நிஜம்.

நமக்குப் பெரிசுதான்.. ஆனால் அவர்களுக்கோ கொசு மாதிரி..
கிரிக்கெட் எத்தனை நாடுகளில் உள்ளது. விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் டென்னிஸ்.. கால்பந்து... கூடைப் பந்து.. இதெல்லாம் கிரிக்கெட்டை விட உலகப் புகழ் பெற்ற விளையாட்டுகள். ஏன். கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் கூட சேர்க்க முடியாது என்று கூறி விட்டார்கள். இதிலிருந்தே கிரி்க்கெட்டின் "புகழ்" தெரிகிறது அல்லவா...!

உண்மையை உணருங்கள் மக்களே...!
பல நாடுகளில் கிரிக்கெட் என்றால் "வெட்டுக்கிளி" பூச்சி என்றுதான் நினைப்பார்கள்.. அந்த அளவுக்குத்தான் கிரிக்கெட்டின் விஸ்தீரணம் உள்ளது.

சச்சின் பெரியவர்தான்.. ஆனால் ரஷ்யாவில்
சச்சின் பெரிய கிரிக்கெட் வீரர்தான். சாதனையாளர்தான். சந்தேகமே இல்லை.. ஆனால் ரஷ்யாவில்.. ரஷ்யர்களுக்கு சச்சினைப் பற்றி எப்படித் தெரிந்திருக்க முடியும். வேடந்தாங்கலுக்குப் போய் அங்கிருப்பவரிடம் மரியா ஷரபோவா யாருன்னு கேட்டா அவர் எப்படிச் சொல்வார்.. அதேபோலத்தான் விலாடிவாஸ்டாக் போய் அங்கிருப்பவரிடம் சச்சின் பற்றிக் கேட்டால் அவர் யார் என்றுதானே கேட்பார்...

கிரிக்கெட்டே கிடையாதே..
ஷரபோவாவின் ரஷ்யாவில் கிரிக்கெட்டே கிடையாது. அங்கிருப்பவர்களுக்குக் கிரிக்கெட்டையும் தெரியாது. கால்பந்து தெரியும், டென்னிஸ் தெரியும்.. மற்ற விளையாட்டுக்கள் தெரியும். கிரிக்கெட் தெரியாத ஒரு நாட்டுக்காரரிடம் ஏன் சச்சினைத் தெரியாமப் போச்சுன்னு சண்டைக்குப் போனால் அதை என்னவென்று சொல்வது..

எல்லோருமே தெரியாதுன்னு சொல்வாங்க
ஷரபோவாவை விடுங்க, கொலம்பியா, அர்ஜென்டினா, உருகுவே, மெக்சிகோ, ஜப்பான், வியட்நாம், தைவான் என உலகின் பெரும்பாலான நாடுகளில் போய்க் கேட்டால் சச்சின் என்றால் யார் என்றுதான் கேட்பார்கள். ஏதோ முத்து பட புண்ணியத்தால் ரஜினியை மட்டும் ஜப்பானியர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்... !

இதில் தவறில்லையே...
ஆனால் சச்சினைத் தெரியாது என்று சொல்வதில் எந்தத் தவறும் நிச்சயமாக கிடையாது, இது அவருக்கு அவமரியாதையும் அல்ல. மற்ற விளையாட்டுக்களைப் போல கிரிக்கெட்டும் ஒரு விளையாட்டு. அதில் இருப்பவர்களுக்குத்தான் மற்ற கிரிக்கெட் வீரர்களை நன்றாகத் தெரிந்திருக்கும். மாறாக மாரடோனாவிடம் போய் விஸ்வநாதன் ஆனந்த் குறித்துக் கேட்டால் அவர் கடுப்பாகத்தான் பார்ப்பார்.

லாஜிக்கா இருக்கப் பாருங்கப்பா
லாஜிக்கோடு எதையும் பார்த்தல்தான் ஆரோக்கியமானது. நல்லதும் கூட. தெரியாத விளையாட்டைப் பற்றியும், தெரியாத விளையாட்டுக்காரர்களைப் பற்றியும் சம்பந்தமில்லாதவர்களிடம் போய் கேட்டு அவர்கள் சொன்ன பதிலை வைத்து மண்டையை உடைத்து மாவிளக்கு வைப்பது நியாயமா... நீங்களே சொல்லுங்க..!


Click it and Unblock the Notifications











