முத்தரப்பு கிரிக்கெட் தொடர்-தேதிகள் மாற்றம்
காலே: இலங்கை முத்தரப்பு தொடரில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கும் போட்டி ஒரு நாள் தாமதமாக நடக்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்திய அணி அடுத்த மாதம் நடக்கவிருக்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை செல்கிறது. இத்தொடரில் மூன்றாவது அணியாக நியூசிலாந்து பங்கேற்கிறது.
இத்தொடரில் இந்திய அணி செப்டம்பர் 10ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் நியூசிலாந்தையும், 12ம் தேதி நடக்கும் இரண்டாவது போட்டியில் இலங்கையையும் எதிர்கொள்ள இருந்தது.
ஆனால், அதே நேரத்தில் இந்தியாவில் நடக்கும் இன்டர்-கார்ப்ரேட் கோப்பை கிரிக்கெட் தொடர் என்ற தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தவிருக்கிறது. செப்டம்பர் 8ம் தேதி வரை நடக்கும் இத்தொடரில் பல இந்திய வீரர்கள் பங்கேற்கவிருக்கின்றனர்.
இந்திய வீரர்கள் முத்தரப்பு தொடரில் 10ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் பங்கேற்றால் அவர்களால் 8ம் தேதி இந்தியாவில் நடக்கும் கார்பரேட் தொடரின் பைனலில் பங்கேற்க முடியாமல் போய்விடும்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம், இலங்கையிடம் போட்டி தேதிகளை மாற்றுமாறு கூறியது. இதையடுத்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவிருந்த முதல் போட்டி வரும் 11ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications