EXCLUSIVE: டேபிள் டென்னிஸில் இந்தியா பதக்கங்களை வென்று குவிக்கும்.. தமிழக வீரர் சரத்கமல் நம்பிக்கை
டெல்லி: இந்திய டேபிள் டென்னிஸின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் என்றால், அது அஜந்தா சரத் கமல் தான். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியது முதல், நாட்டின் மிகச் சிறந்த டேபிள் டென்னிஸ் வீரர்களில் ஒருவராக உருவெடுத்தது வரை, இந்த விளையாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் சரத்கமல் சிறந்து விளங்கியுள்ளார்.
தற்போது, விளையாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், இந்திய டேபிள் டென்னிஸ் அதன் மிகச் சிறந்த காலகட்டத்திற்குள் நுழைவதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கேல் ரத்னா விருது பெற்ற இவர், தற்போது இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தடகளப் பிரிவின் உறுப்பினராகப் பொறுப்பேற்று, வீரரிலிருந்து விளையாட்டு துறை நிர்வாகியாக மாறத் தொடங்கியுள்ளார்.

பல ஆண்டுகளாக, இந்திய டேபிள் டென்னிஸ் பெரும்பாலும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற வெற்றியைக் கொண்டே மதிப்பிடப்பட்டது. அதில் ஏழு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த சரத் கமல் ஒரு முக்கிய வழிகாட்டியாகத் திகழ்ந்தார். எனினும், சென்னையில் பிறந்த சரத் கமல், தற்போது நாட்டின் வளர்ச்சி அனைத்து பகுதிகளிலும் கடந்து சென்றுவிட்டதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மைக்கில் தளத்திற்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், "இந்தியா முக்கிய சர்வதேச பதக்கங்களை வெல்வதில்லை என்ற கருத்தை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். நாங்கள் பல பதக்கங்களை வென்று வருகிறோம். தற்போது இரட்டையர் பிரிவில் உலக அளவில் 2வது இடத்தில் உள்ளோம். கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவை அவர்களின் சொந்த மண்ணிலேயே வீழ்த்தினோம். இவை நாம் இதற்கு முன்பு எப்போதும் கண்டிராத சிறப்பான செயல்பாடுகள் ஆகும்."
சீனியர் அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று, உலகத் தரவரிசையில் முன்னேறி வரும் வேளையில், இளையோர்பிரிவும் அதற்கு இணையான நம்பிக்கையளிக்கும் அறிகுறிகளைக் காட்டி வருகிறது. சின்த்ரிலா தாஸ், திவ்யான்ஷி பௌமிக், பிபி அபிநந்த், அங்குர் பட்டாச்சார்யா மற்றும் பிரேமாஜ் பட்டாச்சார்யா போன்ற இளம் வீரர்களை இந்தியாவின் அடுத்த தலைமுறை நட்சத்திரங்களாக அவர் முன்னிலைப்படுத்தினார்.
இது குறித்து பேசிய அவர்,"நமது வீரர்கள் ஏற்கனவே உலகப் பட்டங்களை வென்று, உலக டேபிள் டென்னிஸ் தொடர்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். 2032 மற்றும் 2036 ஆம் ஆண்டுக்குள், ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வலுவான பதக்கப் போட்டியில் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று கூறினார்.
"இளம் வீரர்கள் ஜூனியர் போட்டிகளை மட்டுமே விளையாடக் கூடாது. அவர்கள் சீனியர் போட்டிகளிலும் பங்கேற்று தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆறு சீனியர் வீரர்களை மட்டுமே அனுப்புவதற்குப் பதிலாக, நான்கு சீனியர் வீரர்களுடன் இரண்டு ஜூனியர் வீரர்களை அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இளைய வீரர்கள் அந்தச் சூழ்நிலைக்குப் பழகவும், மூத்த வீரர்களுடன் பழகி சீனியர் பிரிவுக்கான தேவைகளைப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும். ஜூனியர் போட்டிகளில் வெற்றி பெறுவது மட்டுமே உங்களை சீனியர் தரத்திற்கு முழுமையாகத் தயார்படுத்தாது," என்று அவர் விளக்கினார்.
"இளம் வீரர்கள் திடீரென சீனியர் பிரிவுக்குள் நுழையும் போது, அவர்களுக்கு அனைத்தும் புதியதாகத் தோன்றும். அவர்கள் ஏற்கனவே அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் பயணம் செய்து, பயிற்சி பெற்றிருந்தால், அவர்களது மாற்றம் மிகவும் எளிதாக இருக்கும்." என்று சரத்கமல் சுட்டிக்காட்டினார். 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் உட்பட 5 பதக்கங்களை வென்று சிறப்பான சாதனையைப் படைத்தது.
இருப்பினும், 2026 ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் இடம்பெறவில்லை. இது நாட்டிற்கு கிடைக்கக்கூடிய பல பதக்கங்களை இழக்கச் செய்துள்ளது. இதனால், ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் 2026 ஆம் ஆண்டு ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறார்கள்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நெருங்கி வரும் வேளையில், ஒற்றையர் பிரிவை விட இரட்டையர் மற்றும் குழு போட்டிகளிலேயே இந்தியாவிற்கு அதிக பதக்க வாய்ப்புகள் உள்ளதாக சரத் தெரிவித்துள்ளார். . ஆண்களுக்கான இரட்டையர் ஜோடியான மானவ் தாக்கர் மற்றும் மனுஷ் ஷா, ஸ்ரீஜா அகுலா மற்றும் தியா சிதாலே தலைமையிலான மகளிர் ஜோடிகள் மற்றும் இந்தியாவின் கலப்பு இரட்டையர் ஜோடிகள் ஆசியாவின் சிறந்த வீரர்களுக்கு சவால் அளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"குழு போட்டிகள் மற்றும் இரட்டையர் போட்டிகளைப் பொறுத்தவரை, பதக்கங்களை வெல்வதற்கான நியாயமான வாய்ப்புகள் நமக்கு உள்ளன," என்று அவர் கூறினார். சீனா, ஜப்பான் மற்றும் கொரியாவின் ஆதிக்கம் காரணமாக ஒற்றையர் பிரிவு மிகவும் கடினமாக இருக்கும் என்பதை குறிப்பிட்டுள்ள அவர், இந்திய வீரர்களின் தற்போதைய உலகத் தரவரிசை முன்னேற்றம் ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்று சரத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"காமன்வெல்த் போட்டிகள் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான சரியான பாதையை நமக்கு வழங்கும். இது உள்கட்டமைப்பை உருவாக்குவது பற்றியது மட்டுமல்ல. பெரிய போட்டிகளை எவ்வாறு ஏற்பாடு செய்வது என்பதைக் கற்றுக்கொள்வது, போக்குவரத்து மற்றும் நிர்வாகத் திட்டங்களைப் புரிந்துக்கொள்வது, சர்வதேச கூட்டமைப்புகளுடன் தொடர்புகொள்வது மற்றும் ஒட்டுமொத்த விளையாட்டுத் துறையையும் வலுப்படுத்துவது பற்றியதாகும்."
"விளையாட்டு வீரர்கள் மட்டுமே ஒரு விளையாட்டு நாட்டை வலுவாக்க முடியாது. நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த விளையாட்டுத் துறையும் இணைந்து வளர வேண்டும்." என்று அவர் கூறினார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சரத் கமல் இப்போது பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான துணைத் தலைவர், தமிழ்நாடு உயர் செயல்திறன் மையத்தின் இயக்குநர் மற்றும் இந்திய தேசிய டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கான ஆலோசகர் பதவியை வகிக்கிறார்.
இந்த மாற்றம் தனக்கு இந்திய விளையாட்டு குறித்து ஒரு புதிய பார்வையை வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். "ஒரு வீரராக, நான் எனது சொந்த செயல்பாட்டைப் பற்றி மட்டுமே யோசித்தேன். இப்போது நிர்வாக மேலாண்மை, உடற்பயிற்சி மீட்பு, மருத்துவ ஆதரவு, தங்குமிடம் மற்றும் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட சிறந்த சூழலை உறுதி செய்வது என பின்னணியில் நடக்கும் அனைத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது."
"முன்பு, நான் டேபிள் டென்னிஸுக்கு மட்டுமே பங்களித்தேன். இப்போது என்னால் ஒட்டுமொத்த இந்திய விளையாட்டுத் துறைக்கும் பங்களிக்க முடியும்" என்று சரத் நம்பிக்கை தெரிவித்தார். தனது சொந்த சாதனைகளால் இந்திய டேபிள் டென்னிஸின் முகவரியை மாற்றிய ஒரு வீரரான சரத் கமலின் மிகப்பெரிய பங்களிப்பு, இனி அடுத்த தலைமுறைக்கான பாதையை உருவாக்குவதில் தான் இருக்கும். அவரது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், இந்திய டேபிள் டென்னிஸ் இனி உலக அளவில் பதக்கங்களை வாங்கி குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications



