உலகக் கோப்பை ஹாக்கி- இன்று ஸ்பெயினை சந்திக்கிறது இந்தியா

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா இதுவரை 2 போட்டிகளை முடித்துள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தானை அபாரமாக வென்ற இந்தியா, 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படு தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.
இந்த நிலையில் இன்று 3வது ஆட்டத்தில் ஸ்பெயினை அது சந்திக்கிறது. ஸ்பெயினும் ஒரு தோல்வி ஒரு வெற்றியுடன் உள்ளது.
இந்தியா இன்றைய போட்டியையும் சேர்த்து இன்னும் 3 போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்த மூன்றிலுமே வென்றால்தான் நல்லது, இல்லாவிட்டால் சிக்கலாகி விடும்.
ஸ்பெயின் அணி ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற அணி, வலுவான அணி. இந்த அணியுடன் எப்படியும் வென்றாக வேண்டிய நிலையில் இந்தியா உள்ளதால் அதற்கேற்ற முறையில் உத்திகளை வகுத்துக் கொடுத்துள்ளார் இந்தியப் பயிற்சியாளர் ஜோஸ் மானுவல் பிரசா.
தற்போது புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால், அரை இறுதிக்கு கடும் போட்டி காணப்படுகிறது. இந்தியா, ஸ்பெயின், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையில்தான் கடும் போட்டி காணப்படுகிறது. இந்த நான்கு அணிகளுமே தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. அதேசமயம், இங்கிலாந்து நல்ல நிலையில் உள்ளது. அதன் அரை இறுதி வாய்ப்பு பிரகாசமாகி விட்டது.
இன்றைய ஸ்பெயின் போட்டிக்குப் பின்னர் நாளை இங்கிலாந்தை சந்திக்கிறது இந்தியா. இது மிக மிக முக்கியமான போட்டி. இங்கிலாந்து நல்ல வலுவுடன் உள்ளது. 2 போட்டிகளில் ஆடி இரண்டிலும் வென்றுள்ளது.
அதேபோல ஞாயிற்றுக்கிழமை தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா. இந்தப் போட்டியில் எளிதாக வெல்ல முடியும் என்று கருதப்படுகிறது.
மூன்று போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அரை இறுதி குறித்து இந்தியாவால் நினைத்துப் பார்க்க முடியும் என்பதால் ரசிகர்கள் பரபரப்பாகியுள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:36 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications