துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு 2 வெண்கலம் - பிந்த்ரா, ஆடவர் அணி பதக்கம் வென்றனர்
இன்சியான்: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா 10 மீட்டர் ஆடவர் தனி நபர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதேபோல இதே பிரிவில் ஆடவர் குழு பிரிவிலும் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
17வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது.
செவ்வாய்க்கிழமை நடந்த ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு பிரிவில் இந்தியாவின் பிந்த்ரா, ரவி குமார், சஞ்சீவ் ராஜ்புத் ஆகியோர் அடங்கிய அணி மொத்தம் 1863- 135 எக்ஸ் புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது.

இப்பிரிவில் தங்கத்தை சீனாவும், வெள்ளியை தென் கொரியாவும் வென்றன.
இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்றுள்ள 7வது பதக்கம் இது. குறிப்பாக துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் 5 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிந்த்ராவுக்கு வெண்கலம்
இதேபோல 10 மீட்டர் ஏர் ரைபிள் தனி நபர் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா வென்கலப் பதக்கத்தை வென்றார். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே பிந்த்ரா அறிவித்திருந்தார். தற்போது 2 வெண்கலப் பதக்கங்களுடன் தனது முழு நேர துப்பாக்கிச் சுடும் விளையாட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்றுள்ளார்.
துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த ஒரே வீரர் பிந்த்ராதான் என்பது நினைவிருக்கலாம். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார் பிந்த்ரா.
இதுதவிர உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம், ஒலிம்பிக்கில் தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம், காமன்வெல்த்தில் தங்கம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் என அனைத்து முக்கியப் போட்டிகளிலும் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் பிந்த்ராதான் என்பதும் முக்கியமானது.


Click it and Unblock the Notifications