அறிமுகப் போட்டியிலேயே தங்கம் வென்ற நிஷாத் குமார்.. 7.11 மீட்டர் தாண்டி ஆசிய பாரா போட்டியில் சாதனை
நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் முன்னணி பாரா தடகள நட்சத்திரமான நிஷாத் குமார் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். உயரம் தாண்டுதலில் பல சாதனைகளைப் படைத்து உலகப் புகழ்பெற்ற இவர், ஒரு சர்வதேச அளவிலான பெரிய நீளம் தாண்டுதல் போட்டியில் முதல்முறையாகக் பங்கேற்று 7.11 மீட்டர் தூரம் தாண்டி அசத்தியுள்ளார். துப்பாக்கிச் சுடுதலில் மோனா அகர்வால் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, நடப்பு ஆசிய பாரா தொடரில் இந்தியாவிற்கு கிடைத்த 2-வது தங்கப் பதக்கம் இதுவாகும்.
ஆண்களுக்கான டி47 பிரிவு நீளம் தாண்டுதலில் பங்கேற்ற நிஷாத் குமார், போட்டி தொடங்கிய முதல் நொடியிலிருந்தே முழு ஆதிக்கம் செலுத்தினார். தனது முதல் முயற்சியிலேயே 6.95 மீட்டர் தூரம் தாண்டி அனைவரையும் மிரள வைத்தார். பின்னர் தனது அடுத்தடுத்த வாய்ப்புகளில் அதனை மேலும் அதிகப்படுத்தி, அதிகபட்சமாக 7.11 மீட்டர் தூரத்தைத் தொட்டு தங்கப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தினார். உஸ்பெகிஸ்தானின் கசானோவ் ஓமத்பெக் தனது 5-வது முயற்சியில் 6.99 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கையின் முகமது சஃப்ரான் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர். நிஷாத்தின் முதல் தாவலை கூட எதிரணி வீரர்களால் நெருங்க முடியவில்லை.

உயரம் தாண்டுதலில் நடப்பு ஆசிய சாம்பியனான நிஷாத் குமார், கடந்த 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி இருந்தார். அமெரிக்காவில் தங்கி உலகத்தரம் வாய்ந்த தீவிர பயிற்சி பெற்று வரும் இவர், கடந்த ஆண்டு தான் நீளம் தாண்டுதல் போட்டிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். மாற்றுத்திறனாளி போட்டிகளில் மட்டுமல்லாமல் சாதாரண உடல்தகுதி கொண்ட வீரர்களுக்கான தடகளப் போட்டிகளிலும் சளைக்காமல் போட்டியிடும் பழக்கம் கொண்டவர். மஸ்கட்டில் நடந்த பொதுவான தடகளப் போட்டியில் பங்கேற்று 7.22 மீட்டர் தாண்டி 5-வது இடத்தைப் பிடித்திருந்தார்.
தனது வழக்கமான உயரம் தாண்டுதலைத் தாண்டி, அறிமுகமான முதல் சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டியிலேயே 7.11 மீட்டர் தூரம் பாய்ந்து தங்கம் வென்றதன் மூலம் நிஷாத் குமார் பல புதிய தடைகளைத் தகர்த்தெறிந்துள்ளார். புதிய சவால்களுக்கு அஞ்சாத அவரது இந்த அசாத்திய சாதனை இந்திய விளையாட்டு வட்டாரத்தில் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

