Paralympics 2020: இந்தியாவுக்கு 2வது பதக்கம்.. உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் நிஷாத் குமார்!
டோக்கியோ: டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில், இந்திய அணிக்கு 2வது பதக்கம் வென்று கொடுத்துள்ளார் நிஷாத் குமார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் அதே டோக்கியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவை சார்ந்த 54 வீரர், வீராங்கனைகள் 9 வகை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.
வில்வித்தை, பேட்மிண்டன், துப்பாக்கிசுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, வலுதூக்குதல் உள்பட 9 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதில் தகுதிச்சுற்று முதலே சிறப்பாக விளையாடி வந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவுக்கு 2வது பதக்கம் கிடைத்துள்ளது. உயரம் தாண்டுதல் விளையாட்டில் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். டி47 உயரம் தாண்டுதல் பிரிவில் இந்த வெள்ளிப் பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
இந்தியாவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது பதக்கம் இது. கடந்த 2009 முதல் பாரா விளையாட்டில் அவர் விளையாடி வருகிறார். இவர் இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.
நிஷாத் 2.06 மீட்டர் உயரத்தை தாண்டினார். இதன் மூலம் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. அமெரிக்காவை சேர்ந்த ரோட்ரிக் டவுன்செண்ட் தங்கப்பதக்கம் வென்றார். இவர் 2.15மீ உயரத்தை தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். அதே போல டல்லாஸ் வைஸ் வெண்கலப்பதக்கம் வென்றார்.


Click it and Unblock the Notifications