“நாட்டுக்காக ஆடும் என்னை துன்புறுத்தினார்கள்”.. 2 தங்கம் வென்ற சிம்ரன் சர்மா புகார்.. SAI விளக்கம்
நகோயா: ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், 2 தங்கப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்த இந்திய தடகள வீராங்கனை சிம்ரன் சர்மா, டெல்லி ஜவஹர்லால் நேரு மைதான அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார். போட்டிக்குப் புறப்படுவதற்கு முன்பாகவே தனக்கு பல்வேறு இன்னல்கள் தரப்பட்டதாக அவர் கூறியுள்ளார். நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனைக்கு நேர்ந்த இந்த அநீதி விளையாட்டு வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பார்வையற்ற மாற்றுத்திறனாளி வீராங்கனையான சிம்ரன் சர்மா, ஜப்பான் செல்வதற்கு முன்பாக இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) உடற்தகுதி மையத்தில் சான்றிதழ் பெற முயன்ற போது அதிகாரிகள் அனாவசிய கெடுபிடிகளை விதித்ததாகத் தெரிவித்துள்ளார். "நாட்டுக்காக விளையாடும் வீராங்கனையை அதிகாரிகள் ஏன் துன்புறுத்த வேண்டும்? கூடுதல் கடிதம் கொண்டு வந்தால் மட்டுமே சான்றிதழ் தருவோம் என்று அதிகாரிகள் பிடிவாதம் பிடித்ததால், நான் வேறு ஒரு இடத்தில் சான்றிதழ் பெற வேண்டியதாயிற்று. முக்கியமான சர்வதேச தொடருக்கு தயாராகும் நேரத்தில் அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கு என்னை மிகவும் பாதித்தது" என்று சிம்ரன் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

கடுமையான நிர்வாக அழுத்தங்களைத் தாண்டியும் மைதானத்தில் தனது அசாத்திய திறமையை நிரூபித்த சிம்ரன் சர்மா, பெண்களுக்கான 200 மீட்டர் டி12 பிரிவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். தொடர்ந்து 100 மீட்டர் டி12 பிரிவு ஓட்டப்பந்தயத்தில் பந்தய தூரத்தை வெறும் 12.02 வினாடிகளில் கடந்து, புதிய போட்டி சாதனையுடன் தனது 2-வது தங்கப் பதக்கத்தையும் வென்றார். அவரது இந்த இரட்டைத் தங்க சாதனைக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள இந்திய விளையாட்டு ஆணையம், "சிம்ரன் சர்மாவுக்கு ஜவஹர்லால் நேரு மைதானத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. அவரது புகாருக்குரிய ஆதாரங்கள் அளிக்கப்பட்டால் விசாரணை நடத்தப்படும். அனுமதியின்றி உடற்பயிற்சிக் கூடத்தைப் பயன்படுத்தியது தொடர்பாக அவரது கணவர் மீது எடுக்கப்பட்ட நிர்வாக நடவடிக்கையே இந்தப் புகாருக்குக் காரணமாக இருக்கலாம். வீரர்களின் பாதுகாப்பிற்கு எப்போதுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்று விளக்கம் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications

