ஜோகன்னஸ்பர்க்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டி இன்று நடக்கிறது. மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மோதுகின்றன. இப்போட்டியில் பாகிஸ்தான் வென்றால் மட்டுமே இந்தியாவுக்கு அரையிறுதிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இந்திய ரசிகர்களும் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என விரும்புகின்றனர்.
தென் ஆப்ரிக்காவில் மினி உலக கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானிடம் தோற்றது. ஆஸ்திரேலியாவுடனான இரண்டாவது போட்டியில் மழை பெய்ததால் ஒரு புள்ளி மட்டுமே கிடைத்தது.
இதையடுத்து இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற தற்போது பாகிஸ்தான் கையை எதிர்பார்த்து இருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் வென்று, அதே நேரத்தில் இந்திய அணி இன்று மாலை 6.00 மணிக்கு துவங்கும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.
இது எல்லாம் நடந்தால் மட்டுமே இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும்.
ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றால், தொடரிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும் என்பதால் பாண்டிங் தலைமையிலான அணி கடும் சவால் கொடுக்கும்.
பாகிஸ்தான் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில் இந்த போட்டியின் தோல்வி அவர்களை பாதிக்காது. இதனால் இந்திய வீரர்களின் உடல் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று விளையாடினாலும், அவர்களின் மனசெல்லாம் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மோதும் செஞ்சுரியன் மைதானத்தில் தான் இருக்கும்...
அரையிறுதியில் நியூசிலாந்து...
நேற்று நடந்த போட்டியில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். கோலிங்வுட் 40, போபரா 30 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் பான்ட், எலியாட் பந்துவீச்சில் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இங்கிலாந்து 43.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
எளிய இலக்கை சேஸ் செய்த நியூசிலாந்து 27.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து வென்றது. இதையடுத்து பி பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தலா 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.