கேப்டவுன்: கில்கிறிஸ்ட அதிரடியாக பேட் செய்ய பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டுவென்டி-20 லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஐபிஎல் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. இன்று நடந்த லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற கில்கிறிஸ்ட் டெக்கான் சார்ஜர்ஸ் கேப்டன் கில்கிறிஸ்ட் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். துவக்க வீரராக கிப்ஸ் 13 ரன்களுக்கு அவுட்டானார். லட்சுமண் 5 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து வந்த ரோகித் சர்மா ஒத்துழைப்பு கொடுக்க கில்கிறிஸ்ட் சிறப்பாக விளையாடினார். அவர் 5 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 45 பந்தில் 71 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரோகித் 30 பந்தில் 52 ரன்கள் சேர்த்தார். டெக்கான் சார்ஜர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட் செய்த பெங்களூர் அணிக்கு ரைடர் டக் அவுட்டாகி மோசமான ஏமாற்றம் அளித்தார். உத்தப்பா 12, காலிஸ் 15, பீட்டர்சன் 11 ரன்களுக்கு வரிசையாக அவுட்டாக, பெங்களூர் அணியின் சரிவு ஆரம்பமானது.
டிராவிட் 48 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 100 ரனகளை தாண்ட உதவினார். விராத் கோஹ்லி (50) அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். பெங்களூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. டெக்கான் சார்ஜர்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் டெக்கான் சார்ஜர்ஸ் அணி இத்தொடரில் தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.