டெல்லி: நேரு கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் லெபனானிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
நேரு கோப்பை காலந்துபந்து தொடர் டெல்லியில் உள்ள அம்பேத்கார் மைதானத்தில் நேற்று துவங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, லெபனான் அணிகள் மோதின.
ஆட்டம் துவங்கிய ஐந்தாவது நிமிடத்தில் லெபனான் வீரர் அலி அல் சாத் தனக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை கோலாக மாற்றினார்.
இதையடுத்து இந்திய வீரர்கள் சுதாரித்து கொண்டு விளையாடினார்கள். சர்குமார் சிங், கேப்டன் பாய்ச்சங் பூட்டியா, ஸ்டீவன் டையாஸ் ஆகியோர் மனம் தளராமல் போராடினர். 10வது நிமிடத்தில் ஸ்டீவன் டையாஸ் அடித்த ப்ரீ கிக்கை பிரதீப் தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால், அது நூலிழையில் தவறியது.
அதேபோல் இந்திய அணி கோலடிக்க மேற்கொண்ட பல முயற்சிகள் பலனளிக்காமல் போயின. இறுதியில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்திய அணி அடுத்து போட்டியில் வரும் 22ம் தேதி கிர்கிஸ்தானை எதிர்கொள்கிறது.