வெலிங்டன்: இந்தியாவுடனான இரண்டாவது டுவென்டி 20 போட்டியி்ல் கடைசிப் பந்தில் நியூசிலாந்து ஒரு ரன் எடுத்து நூலிழையில் வெற்றியைத் தட்டிச் சென்றது. 2 போட்டிகளிலும் தோற்று இந்தியா தொடரை நழுவ விட்டது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் இரு டுவென்டி 20 போட்டிகளில் ஆடியது. முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதால் இன்று வெலிங்டனில் நடந்த போட்டியிலாவது இந்தியா வென்று தொடரை சமன் செய்யுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டேணியல் வெட்டோரி இம்முறையும் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
ரோகித் சர்மா நீக்கம்...
முதல் போட்டியில் தடுமாறிய இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. மந்தமாக விளையாடிய ரோகித் சர்மாவுக்கு பதில் ஆல்-ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா வாய்ப்பு பெற்றார்.
துவக்க வீரராக வந்த ஷேவாக் வழக்கம் போல் அதிரடி காட்டினார். 5 பவுண்டரிகள் உட்பட 11 பந்தில் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுமுனையில் கம்பீர் 10 ரன்களுக்கு நடையை கட்டினார்.
அடுத்து முதல் போட்டியில் அரைசதம் கடந்த ரெய்னா வந்தார். இம்முறை அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் டக் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார்.
யுவராஜ் அரைசதம்
இதையடுத்து ஐந்தாவது வீரராக வந்த கேப்டன் டோணி, யுவராஜூடன் ஜோடி சேர்ந்தார். ஒரு பக்கம் டோணி நிதானமாக விளையாட மறுமுனையில் யுவராஜ், நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். ஓபிரைன் பந்தில் ஒரு சூப்பர் சிக்சர் அடித்து யுவராஜ் அரைசதம் கடந்தார்.
ஆனால் அவர் அதே ஓவரின் நான்காவது பந்தில் அடுத்த சிக்சருக்கு ஆசைப்பட்டு, ஓரம் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4 சிக்சர், 3 பவுண்டரி விளாசிய யுவராஜ், 34 பந்தில் 50 ரன்கள் எடுத்தார்.
அடுத்த வந்த அதிரடி யூசுப் பதான், வெட்டோரி சுழலில் 'டக்' அவுட்டானார். இளம் வீரர் ரவிந்திர ஜடேஜா 19 ரன்களுக்கு அவுட்டானார்.
விக்கெட் வரிசையாக விழுந்ததை அடுத்து கேப்டன் டோணி மந்தமாக விளையாடினார். இதையடுத்து ரன்வேகம் சரிந்தது. இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. டோணி 30 பந்தில் 28, இர்பான் பதான் 10 பந்தில் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ரைடர், பிரன்டன் மெக்கலம் அதிரடி துவக்கம் தந்தனர். ரைடர் 15 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஜாகிர் பந்தில் போல்டு ஆனார். அடுத்து வந்த குப்டில் 10 ரன்களுக்கு ஹர்பஜன் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.
ரோஸ் டெய்லர் 27 ரன்கள் எடுத்து, பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் பிரன்டன் மெக்கலம் பொறுப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். ஓரம்(0), புரூம் (5) விரைவில் அவுட்டாக, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடைசி பந்தில் திரில் வெற்றி...
ஆட்டத்தின் கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட, ரசிகர்கள் மத்தியில் டென்ஷன் எகிறியது. முதல் மூன்று பந்துகளில் இர்பான் பதான் தலா ஒரு ரன்னை விட்டுகொடுத்தார். நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் மெக்கலம் தலா ஒரு பவுண்டரி அடித்தார்.
கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் நியூசிலாந்து வெற்றி பெறும் என்ற சூழ்நிலையில் மெக்கலம் பந்தை தூக்கியடித்தார். அது காற்றில் பறந்தது. கேட்ச் பிடித்தால் போட்டி டை ஆகும் என எதிர்பார்த்த சூழ்நிலையில் சற்று கடினமான அந்த கேட்சை ஜாகிர் கோட்டைவிட வெற்றி வாய்ப்பு பறிபோனது.
நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியது. மெக்கலம் 69 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டுவென்டி 20 உலக சாம்பியனான இந்திய அணி இதுவரை நியூசிலாந்துக்கு எதிராக 3 டுவென்டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த மூன்றிலுமே தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்விரு அணிகளும் மோதும் ஒரு நாள் தொடர் வரும் 3ம் தேதி நேப்பியரில் துவங்குகிறது.