கொழும்பு: இலங்கையில் நல்ல மழை பெய்து வருவதால் நாளை துவங்கவிருக்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் திட்டமிட்டப்படி நடக்குமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் மூன்றாவது அணியாக நியூசிலாந்து பங்கேற்கிறது. இத்தொடரின் முதல் போட்டி நாளை 8ம் தேதி கொழும்புவில் துவங்குகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இலங்கையில் நல்ல மழை பெய்து வருகிறது. வானம் இருண்டு கிடக்கிறது. போட்டி நடைபெறும் நாட்களிலும் மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை மையங்களும் கூறுவதால் இத்தொடர் திட்டமிட்டபடி தொடர்ந்து நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்ற டுவென்டி-20 தொடரின் இரண்டு போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டது. மொத்தமே 40 ஓவர் என்பதால் ஒரு வழியாக போட்டியில் முடிவு கிடைத்தது.
ஆனால், சுமார் 8 மணி நேரத்துக்கு மேல் நடைபெறும் பகல் இரவு போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடர் மழையால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமிருப்பதாகவே கருதப்படுகிறது.
மேலும், இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒரு முறை மட்டுமே மோதுகிறது. இதனால், ஒரு போட்டியில் மழை பெய்து அதனால் பாதிக்கப்படும் அணி தொடரைவிட்டு கூட வெளியேறும் நிலைமை ஏற்படலாம் என கிரிக்கெட் நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் மீடியா மானேஜர் பிரையன் தாமஸ் கூறுகையில்,
மழை பெய்யும் போது மட்டும் தான் ஆட்டம் பாதிக்கப்படும். கொழும்பு மைதானத்தில் நீரை வெளியேற்றும் வசதிகள் சிறப்பாக இருக்கிறது. மழை நின்றவுடனே ஆட்டத்தை துவக்க முடியும். இதனால் மழை பெரிய பிரச்சனையாக இருக்காது என்றார்.