அகமதாபாத்: 2வது டெஸ்ட் போட்டியின் முதல்நாளிலேயே இந்தியா 74 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 223 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா-தென்ஆப்பிரிக்க அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் இன்று தொடங்கியது.
முதல்நாள் மதிய உணவு இடைவேளைக்கு முன்பே, தென் ஆப்பிரிக்க வீரர்களின் புயல் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 74 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா தேநீர் இடைவேளையின்போது 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை குவித்தது. துவக்க ஆட்டக்காரர் ஸ்மித் 34 ரன்கள் எடுத்தபோது ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். ஹர்பஜன் பந்து வீச்சில் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான மெக்கன்சி 42 ரன்னில் திராவிட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
ஹாஷிம் அம்லா 16 ரன்களுடனும், ஜாக் காலீஸ் ரன் எதுவும் இல்லாமல் அப்போது களத்தில் இருந்தனர். மீண்டும் ஆட்டம் துவங்கிய முதல் ஓவரிலேயே ஹர்பஜன் பந்துவீச்சில் ஜாபரிடம் கேட்ச் கொடுத்து அம்லா அவுட்டானார். இதையடுத்து பிரின்ஸ் 2 ரன்கள் எடுத்து ஹர்பஜன் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.
அடுத்தடுத்து 2 தென்ஆப்பிரிக்க வீரர்களை வீழ்த்தியதால் இந்திய வீரர்கள் உற்சாகமடைந்தனர். விக்கெட் எடுத்த ஹர்பஜனை ரசிகர்கள் ஆரவாரம் செய்து பாராட்டினர்.
இதைத் தொடர்ந்து 5 வது விக்கெட்க்கு காலீஸும், டிவில்லியர்ஸும் ஜோடி சேர்ந்தனர். தென்ஆப்பிரிக்க பேட்டிங் வரிசையில் ஏற்பட்ட திடீர் சரிவை இந்த ஜோடி நிலைநிறுத்தியது.
ஆட்டநேர இறுதிவரை விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். மொத்தம் 64 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி குவித்தது.
காலீஸ், டிவில்லியர்ஸ் இருவருமே அரைச்சதம் போட்டனர்.
காலீஸ் 124 பந்துகளில் 60 ரன்களை எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர் அடங்கும். டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி 102 பந்துகளில் 59 ரன்களை எடுத்தார். இவர் 7 பவுண்டரிகளை விளாசினார்.
இந்திய அணியில் ஹர்பஜன் 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறித்தார். ஸ்ரீசாந்த் 53 ரன்களை விட்டுத்தந்து கேப்டன் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தினார்.
முன்னதாக,
காயம் காரணமாக இந்திய அணியில் டெண்டுல்கர் இடம்பெறவில்லை. இவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் இர்பான் பதான் சேர்க்கப்பட்டார்.
காலையில் டாஸில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்யத் தொடங்கியது. ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே தென் ஆப்பிரிக்க வீரர்களின் பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் வரிசையாக பெவிலியனுக்குத் திரும்பினர்.
ஓபனிங் பேட்மென்களாக வீரேந்திர சேவாக்கும், வாசிம் ஜாபரும் களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 16 ரன்களாக இருந்தபோது ஜாபர் 9 ரன்களுடன் நிட்னி பந்து வீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
2வது விக்கெட் ஜோடிக்கு திராவிட் வந்தார். அடுத்த ஓவரிலேயே ஸ்டெயின் பந்து வீச்சில் சேவாக் கிளீன் போல்டு ஆனார். அவரது ரன்கள் 6.
2 விக்கெட்டுக்கு 24 ரன்கள் என்ற நிலையில் திராவிட்டுடன் விவிஎஸ் லட்சுமண் ஜோடி சேர்ந்தார்.
சரிவில் இருந்து அணியை இவர்கள் மீட்பார்கள் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிதறடித்தார் லட்சுமண். 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் நிடினி பந்து வீச்சில் லட்சுமண் ஸ்டம்புகள் சிதறின.
அடுத்து வந்த சவுரவ் கங்குலி நிடினியின் அதேஓவரில் இரண்டாவது பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் போல்டானார். 30 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பரிகொடுத்து பரிதாப நிலையில் இந்திய அணி இருந்தது.
இந்த நிலையில் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த திராவிட்- டோணி ஜோடி சில ஓவர்களுக்கு நிலைத்தது. 13.1 ஓவரில் 53 ரன்களை எட்டியபோது
திராவிட் அவுட்டானார்.
அதன் பின்னர் மளமளவென்று இந்திய அணி வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
டோணி 14, ஹர்பஜன் 1, கும்ப்ளே, ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் 'டக்' அவுட்டானார்கள்.
26 ரன்களுடன் இர்பான் பதான் ஆட்டமிழக்காமல் இருப்பதுதான் ஒரே ஆறுதல்.
20 ஓவரில் 76 ரன்கள் எடுத்தநிலையில் இந்தியா ஆல்அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க பௌலர்களில் ஸ்டெயின் 23 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நிடினி 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறித்தார்.
மோர்கெல் 20 ரன் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் தொடங்கியது.
சென்னை பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்த நிலையில் அகமதாபாத் பிட்ச் பௌலர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டது. ஆடுகளத்தில் புற்கள் இருப்பதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை தென் ஆப்பிரிக்க பவுலர்கள் நிரூபித்துள்ளனர்.
குறைந்த ரன்களில் இந்தியா சுருண்டிருப்பதால் இந்த போட்டியில் நிச்சயம் முடிவு தெரியும்.
போட்டிக்கான இரண்டு அணி வீரர்கள் வருமாறு:-
இந்தியா: கும்பிளே(கேப்டன்), வாசிம் ஜாபர், ஷேவாக், டிராவிட், கங்குலி, யுவராஜ்சிங், முகமது கயூப், மகேந்திரசிங் டோனி (விக்கெட் கீப்பர்), இர்பான் பதான், ஆர்.பி.சிங், ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்த், இஷாந்த் ஷர்மா, பியுஷ் சாவ்லா.
தென்ஆப்பிரிக்கா: சுமித் (கேப்டன்), பிரின்ஸ், ஹசிம் ஆம்லா, மார்க் பவுச்சர் (விக்கெட் கீப்பர்), டிவில்லியர்ஸ், டுமினி, பால் ஹாரிஸ், கல்லீஸ், மெக்கன்சி, மோர்னே மோர்கல், நிதினி, ராபின் பீட்டர்சன், ஸ்டெயின், சோன்டெகி.