100 வருட காத்திருப்புக்கு முடிவு.. சரித்திரம் படைக்கும் 2வது இந்தியர்.. நீரஜ் சோப்ரா படைத்த சாதனைகள்!
ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் 100 ஆண்டு கால காத்திருப்பை நீரஜ் சோப்ரா பூர்த்தி செய்துள்ளார்.
Recommended Video
சர்வதேச அளவில் பல்வேறு நாட்டு வீரர்களுக்கும் சவால் கொடுத்து பதக்கத்தை குவித்து வந்த வந்த நீரஜ் சோப்ரா, இன்று ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம் 12 வீரர்கள் கலந்துக்கொண்ட நிலையில் அவர்களுக்கு நீரஜ் சோப்ரா முதல் சுற்றில் இருந்தே சவாலாக திகழ்ந்தார்.

இறுதிச்சுற்று
மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்ற இறுதிச்சுற்று, 6 சுற்றுகளாக நடத்தப்பட்டது. அதாவது மொத்தம் 6 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. தனது முதல் சுற்றில் 87. 03 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி நீரஜ் சோப்ரா அசத்தினார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முதல் சுற்றிலேயே அசத்திய அவர், 2வது சுற்றில் 87.58 மீ தூரம் வீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனால் முதல் 2 சுற்றுகளில் யாராலும் அசைக்க முடியாத டாப் இடத்திற்கு அவர் சென்றார்.

தங்கப்பதக்கம்
இதன் பின்னர் நடைபெற்ற 3,4, 5வது சுற்றுகளில் நீரஜ் சோப்ராவால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. ஃபௌல்களே மிஞ்சியது. எனினும் சோப்ராவாவின் 87.58 மீட்டர் என்ற தூரத்தை எந்த ஒரு வீரராலும் தகர்க்க முடியவில்லை. இதனால் இறுதியில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

டோக்கியோ ஒலிம்பிக்
இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இதற்கு முன்னர் பி.வி.சிந்து, மீராபாய் சானு, ரவிக்குமார் தஹியா உள்ளிட்டோர் 6 பதக்கங்களை இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். இது 7வது பதக்கமாக இணைந்துள்ளது.

தங்கம் வெல்லும் 2வது நபர்
இதுமட்டுமல்லாமல் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக புதிய சரித்திரம் படைத்துள்ளார் அவர். ஒலிம்பிக்கில் தனி நபர் ஆட்டத்தில் தங்கப்பதக்கம் வெல்லும் 2வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.

முதல் பதக்கம்
ஒலிம்பிக் தொடரில் இந்தியா கடந்த 1920ம் ஆண்டு முதல் பங்கேற்று வருகிறது. பல்வேறு போட்டிகளிலும் இந்தியா பதக்கங்களை வென்று வந்தாலும், தடகளப்போட்டியில் மட்டும் இதுவரை ஒரு பதக்கத்தை கூட வென்றதில்லை. கடந்த 1960ம் ஆண்டு மில்கா சிங், 1984ம் ஆண்டு பி.டி.உஷா ஆகியோரால் கூட பதக்கம் வென்று கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் பதக்கத்திற்காக 100 ஆண்டுகளாக காத்திருந்த இந்தியாவின் ஏக்கத்தை இன்று நீரஜ் சோப்ரா போக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications