கிரிக்கெட் பெட்டிங்கால் எனது ஆட்டம் பாதிக்கப்பட்டது-சச்சின்

1999-2000மாவது ஆண்டில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. அதில் 0-3 என்ற கணக்கில் மூன்று டெஸ்ட் போட்டிகளையும் இழந்தது. அந்த சமயத்தில் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டமும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை.
இதுகுறித்து சச்சின் கூறுகையில், அந்த சமயத்தில் நான் சரியான மன நிலையில் இல்லை. அதற்குக் காரணம் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சைகள். அவை எனது மனதையும், எனது ஆட்டத்தையும் பாதித்தன.
ஒவ்வொரு வீரரையும் சந்தேகக் கண்ணோடு ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது. இந்த வலியைத் தாங்கிக் கொண்டு நாங்கள் ஆட முயற்சித்தோம். இருப்பினும் என்னால் முழுமையாக கவனத்தை செலுத்த முடியாமல் போனது.
இருப்பினும் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் எந்த ஒரு புக்கியும், என்னை வந்து சந்தித்ததே இல்லை. என்னை யாருமே அணுகியதில்லை. மேலும் அணி கூட்டத்தின்போதும் அதுகுறித்து நாங்கள் யாருமே பேசியதில்லை, புகார் கூறியதில்லை.
கிரிக்கெட் சூதாட்டத்தால் நல்லவர்களும் கூட பாதிக்கப்படுவது வருத்தத்திற்குரியது என்றார் சச்சின்.
சூப்பர் ஸ்போர்ட் என்ற டிவி சானலுக்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் அலி பேக்கருக்கு அளித்த பேட்டியின்போது இவ்வாறு கூறியுள்ளார் சச்சின்.
இந்திய அணி, ஆஸ்திரேலிய தொடருக்குக் கிளம்புவதற்கு முன்பே இந்திய வீரர்களை மையப்படுத்தி கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சைகள் வெடித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications