மன்னிக்க வேண்டுகிறோம், பேசலாம், பேசித் தீர்க்கலாம்.. இறங்கி வரும் மேற்கு இந்தியத் தீவுகள்
பார்படாஸ்: இந்திய தொடரை பாதியிலேயே நிறுத்தி விட்டுக் கிளம்பிப் போய் விட்டதால் கடுப்பான இந்திய கிரிக்கெட் வாரியம், மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் நேரடித் தொடரில் இனி மோதுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. மேலும் மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்திடம் மிகப் பெரிய தொகையை அபராதமாக கோரப் போவதாகவும் அறிவித்துள்ளது. சட்ட நடவடிக்கைக்கும் அது தயாராகி வருகிறது.
இதனால் மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஐசிசியை விட பிசிசிஐ மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் இ்நதியாவின் கோபத்திற்கு ஆளாவதை விட சமரசமாக போவதே நல்லது என்ற முடிவுக்கு அது வந்துள்ளது.
மேலும் இந்தியாவின் தீவிர நடவடிக்கையால் மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட்டின் எதி்ர்காலமும் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்ற அச்சமும் அவர்களுக்கு வந்துள்ளது. இதனால் தற்போது பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அவர்கள் பிசிசிஐக்கு அழைப்பு விடுத்துள்ளனர்

இந்தியாவுடன் பேச விருப்பம்
இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தற்போது மேற்குஇந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. இதற்காக வாரியக் குழுவினர் இந்தியா வரத் திட்டமிட்டுள்ளனராம்.

7 மணி நேர ஆலோசனை
இதுதொடர்பாக மேற்கு இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூடி கிட்டத்தட்ட 7 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

வருந்துகிறோம்
பின்னர் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், நடந்ததற்காக மேற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. இது எங்களுக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

நடந்தது தவறுதான்
நடந்தது தவறுதான். இதற்காக நாங்கள் மீண்டும் எங்களது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சரி செய்யலாம்
இதை சரி செய்ய வழி இருக்கும். அத்ற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட்டுக்கும், உலக கிரிக்கெட்டுக்கு அது நன்மை பயக்கும் என்பதால் இதை பிசிசிஐ பரிசீலனை செய்ய வேண்டும்.

விசாரணைக் குழு
பிசிசிஐயுடன் பேசும் நாளுக்காக காத்திருக்கிறோம். மேலும் எதனால் இப்படி நேர்ந்தது என்பது குறித்து விசாரிக்கவும் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தூது செல்ல விரும்பும் கிரெனடா பிரதமர்
இதற்கிடையே மேற்கு இந்தியத் தீவுகளுக்குட்ட்ட கிரெனடாவின் பிரதமர் கீத் மிட்சல், இந்த விவகாரத்தில் தான் மத்தியஸ்தராக செயல்பட விரும்புவதாக அறிவித்துள்ளார். கரீபியத் தீவுகளுக்கு இது மிகவும் அவமானகரமானது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

வாரியத்தின் மெத்தனமே காரணம் - ஹோல்டிங் விளாசல்
இதற்கிடையே, மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் எந்தப் பிரச்சினைையும் ஆரம்பத்திலேயே சரி செய்வதில்லை. வளர விட்டு முற்றிய பிறகுதான் அதுகுறித்தே யோசிக்கிறது. இதுதான் முக்கியப் பிரச்சினை என்று முன்னாள் பந்து வீச்சு ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் குற்றம் சாட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications