ஆக்ரோஷமான மோதலில் ஆருயிர்த் தோழிகள்.. செரீனா, வோஸ்னியாக்கி!
நியூயார்க்: நாங்கள் இருவரும் நல்ல தோழிகள் என்று அடிக்கடி கூறி வருபவர்கள் செரீனா வில்லியம்ஸும், கரோலின் வோஸ்னியாக்கியும். ஆனால் இன்று இருவரும் எதிரும் புதிருமாக நிற்கிறார்கள்.. அமெரிக்க ஓபன் டென்னிஸின் மகளிர் ஒற்றையர் பிரிவு பட்டத்தை யார் பறிப்பது என்ற போட்டியில்.
இருவருமே தனித் திறமை கொண்டவர்கள், ஆக்ரோஷ குணமும், போராடும் மனோபாவமும் கொண்டவர்கள் என்பதால் இந்தப் போட்டி மகா விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இருவருமே விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதால் வெல்லப் போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பும் உள்ளது. இருவருமே கிட்டத்தட்ட புல்டோசரைப் போல மாறி ஒருவரை ஒருவர் நசுக்க முயற்சிப்பார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை.

பவர் ஹவுஸ்களின் மோதல்
இருவருமே பவர்புல்லான வீராங்கனைகள் என்பதால் யாருடைய வேகத்திற்கு யார் பலியாகப் போகிறார்கள் என்பதுதான் அனைவரின் பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

செரீனா எனக்கு இன்ஸ்பிரேஷன்
செரீனா குறித்து வோஸ்னியாக்கி கூறுகையில், செரீனா மிகவும் வேடிக்கையானவர். என்னை அதிகம் சிரிக்க வைப்பார். இன்ஸ்பிரேஷனும் கூட. எனவே போட்டியை நானுமே கூட ஆவலாக எதிர்பார்க்கிறேன் என்றார்.

ஓங்கி நிற்கும் செரீனா கை
செரீனாவும், வோஸ்னியாக்கியும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 8 முறை செரீனாதான் வென்றுள்ளார். எனவே வரலாறு செரீனா பக்கம் நிற்கிறது.

எனக்கு வரலாறு.. அவருக்கு முதல் முறை
வோஸ்னியாக்கி குறித்து செரீனா கூறுகையில், என்னைப் பொறுத்தவரை இந்த வெற்றியானது புதிய வரலாறைப் படைக்கும் (18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள மார்ட்டினா நவ்ரத்திலோவா மற்றும் கிறிஸ் எவர்ட் சாதனையை சமன் செய்வார் செரீனா). ஆனால் வோஸ்னியாக்கிக்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும் என்றார்.

அடுத்தடுத்து தோல்வி
இந்த ஆண்டு செரீனாவுக்கு ஏமாற்றமான ஆண்டாக அமைந்தது. ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் பட்டம் ஆகியவற்றை அவர் வெல்லவில்லை. எனவே தனது சொந்த நாட்டில் நடைபெறும் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று இந்த ஆண்டை சற்றே ஆறுதலாக முடிக்கஅவர விரும்புகிறார்.

தைரியமாக சந்திப்பேன்
தோழியுடன் மோதுவது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறதா என்று செரீனாவிடம் கேட்டால், அதெல்லாம் இல்லை. எனது தங்கை வீனஸுடன் மோதும்போது கரோலினுடன் மோதுவதில் என்ன வருத்தம் வந்து விடப் போகிறதே. எனவே மன ரீதியாக எந்த வருத்தமும், கவலையும் எனக்கு இல்லை. இது போட்டி. மோதிப் பார்த்து விடுவோம்.. நட்பு இதனால் மாறப் போவதில்லையே என்கிறார் சிரித்தபடி.
இந்த "ஸ்போர்ட்டிவ் ஸ்பிரிட்"தான் செரீனாவை இத்தனை காலமாக டென்னிஸ் உலகில் தூக்கிப் பிடித்து வைத்திருக்கிறது....!


Click it and Unblock the Notifications