இத்தாலியை வீழ்த்தி 24 ஆண்டுகளுக்குப் பின் 2வது சுற்றுக்கு முன்னேறிய கோஸ்டாரிகா!!
ரெசிபி: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி அணியை வீழ்த்தி 24 ஆண்டுகளுக்குப் பின்னர் 2வது சுற்றுக்கு கோஸ்டாரிகா அணி தகுதி பெற்றுள்ளது.
உலக கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ரெசிபியில் நடைபெற்ற போட்டியில் இத்தாலியும் கோஸ்டாரிகாவும் மோதின. அணிகளின் தரவரிசைப் பட்டியலில் 9வது இடத்தில் இருப்பது இத்தாலி அணி. ஆனால் 28வது இடத்தில் இருக்கிறது கோஸ்டாரிகா அணி.
நேற்றைய போட்டியில் எப்படியும் வென்றுவிடுவோம் என்ற மிதப்பில்தான் இருந்தது இத்தாலி. கோஸ்டாரிகாவை இத்தாலி வீழ்த்திவிட்டால் இங்கிலாந்து அணிக்கான அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இதனாலே இத்தாலி வீரர் பலோடெலி, நாங்கள் வெற்றி பெற்றால் இங்கிலாந்து ராணியின் முத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்று அடம்பிடித்து பேட்டியளித்திருந்தார்.

கோலோச்சிய கோஸ்டாரிகா
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நேற்றைய போட்டியில் தொடக்கத்தில் இருந்தே கோஸ்டாரிகாதான் கோலோச்சிக் கொண்டிருந்தது.

ஏமாற்றிய மரியோ பலோடெலி
இத்தாலி அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மரியோ பலோடெலி 31வது நிமிடம் மற்றும் 33 வது நிமிடத்தில் தமக்கு கிடைத்த கோல் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு பெரும் அதிர்ச்சி அளித்தார்.

தலையால் கோலடித்த ரூயிஸ்
போட்டியின் 43வது நிமிடத்தில் கோஸ்டாரிகாவுக்கு பெனால்டி வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால் அடுத்த நிமிடமே தியாஸ் கொடுத்த பாஸை கேப்டன் பிரையன் ரூயிஸ் தலையால் முட்டி கோலடிக்க கோஸ்டாரிகா துள்ளிக் குதித்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகா முன்னிலை வகித்தது.

கோலுக்கான பெரும் போராட்டம்
ஆட்டத்தின் 2வது பாதியில் எப்படியாவது கோல் அடித்தாக வேண்டும் என்று இத்தாலி போராடிப் பார்த்தது. கோஸ்டாரிகாவும் மேலும் ஒரு கோல் அடிக்க முயற்சித்தது. ஆனால் இரண்டு அணி வீரர்களாலுமே 2வது பாதியில் ஒரு கோலும் போட முடியவில்லை.

வீழ்ந்ததே இத்தாலி
இதனால் ஆட்ட முடிவில் கோஸ்டாரிகா அணி 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 16-க்கு தகுதி பெற்றுள்ளது.

24 ஆண்டுகளுக்குப் பின்..
முந்தைய போட்டியில் உருகுவேயை உருக்குலைத்திருந்தது கோஸ்டாரிகா அணி. தற்போது இத்தாலியை வீழ்த்தி 24 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக 2வது சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது.


Click it and Unblock the Notifications