
இதற்கு முன் 7 முறை
இங்கிலாந்தின் லண்டன் நகரில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-1' வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, 13வது இடத்தில் உள்ள செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா மோதினர். விம்பிள்டன் தவிர்த்து, இவ்விரு வீராங்கனைகளை இதற்கு முன் 7 முறை மோதியுள்ளனர். இதில் ஆஷ்லே பார்டி 5 முறையும், பிலிஸ்கோவா 2 முறையும் வெற்றிப் பெற்றுள்ளனர். கடைசியாக ஜெர்மனியில் நடந்த ஸ்டட்கர்ட் ஓபன் காலிறுதியில் ஆஷ்லே பார்டி வெற்றி பெற்றிருந்தார்.

2வது கிராண்ட்ஸ்லாம்
இந்நிலையில், இன்று நடைபெற்ற விம்பிள்டன் இறுதிப் போட்டியில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இருவரும் களமிறங்கினர். இருவரும் ஆக்ரோஷமாக மோதினர். ஆனால், மீண்டும் ஆஷ்லே பார்டி டாமினேட் செய்துவிட்டார். இவர் 6-3, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் பிலிஸ்கோவாவை வீழ்த்தி வெற்றிப் பெற்றார். இதன் மூலம், விம்பிள்டனில் தனது முதல் கோப்பையை பார்டி கைப்பற்றினார். தவிர இது, இவரது 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்துள்ளது. இதற்கு முன் 2019ல் பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்றிருந்தார். விம்பிள்டன் பட்டம் வெல்வதே பார்டியின் சிறு வயது லட்சியம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏமாற்றமே மிஞ்சியது
அதேசமயம், தோல்வியடைந்த கரோலினா பிலிஸ்கோவா, தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கோட்டைவிட்டார். இதற்கு முன், 2016ல் யு.எஸ்., ஓபனில் பைனல் வரை சென்று கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தவறவிட்ட நிலையில், எப்படியாவது விம்பிள்டன் பட்டத்தை வென்றுவிட வேண்டும் என்று வேட்கையோடு இருந்தார். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.

ரசிகர்கள் வாழ்த்து
இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் முதன் முறை விம்பிள்டன் வென்ற, ஆஷ்லே பார்டிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சமூக தளத்தில் அவருக்கு வாழ்த்து செய்திகள் குவிகின்றன. இந்நிலையில், நாளை (ஜுலை 11) நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஜோகோவிச், மேட்டியோ பெரெட்டினி ஆகியோர் மோதுகின்றனர். நடப்பாண்டில் ஆஸ்திரேலிய, பிரெஞ்ச் ஓபன் தொடர் என ஏற்கனவே பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், தற்போது விம்பிள்டன் தொடரிலும் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார். அடுத்து வரும் யுஎஸ் ஓபன் தொடரிலும் பட்டம் வென்றுவிட்டால் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற பெருமையை பெறுவார்.


Click it and Unblock the Notifications











