துவங்குகிறது பிரெஞ்ச் ஓபன்..... 11வது முறையாக வெல்ல நடால் தயார்.... சாதிப்பாரா செரீனா!
பாரிஸ்: ஆண்டின் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் 27ம் தேதி துவங்குகின்றன. ஆடவர் பிரிவில் 11வது முறையாக ஸ்பெயினின் ரபேல் நடால் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஓரண்டாக விளையாடாமல் இருந்த செரீனா வில்லியம்ஸ் சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
டென்னிஸ் விளையாட்டில் நடக்கும் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இரண்டாவதான பிரெஞ்ச் ஓபன் போட்டிகள், பாரிஸின் ரோலண்ட் காரோஸில் வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது.
களிமண் தரையில் நடக்கும் இந்தப் போட்டி, 122வது ஆண்டாக நடைபெற உள்ளது. இதில் ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் ரபேல் நடால் மீண்டும் பட்டம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017 என 10 முறை வென்று, ஓபன் யுகத்தில் ஒரு கிரண்ட் ஸ்லாம் பட்டத்தை அதிக முறை வென்றவர் என்ற பெருமையைக் கொண்டுள்ளார்.

களிமண் ராஜா நடால்
இதுவரை 16 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால், களிமண் தரையில் ராஜாவாக கருதப்படுகிறார். 20 கிராண்ட் ஸ்லாம் வென்றுள்ள சீனியரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரிட்டனின் ஆண்டு முர்ரே ஆகியோர் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. பிரெஞ்ச் ஓபன் துவங்குவதற்கு முன்பே, 11வது முறையாக நடால் பட்டம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மீண்டும் செரீனா
மகளிர் பிரிவில் அமெரிக்காவின் 36 வயதாகும் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் களமிறங்குகிறார். கடந்தாண்டு ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பட்டம் வென்ற அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

விளையாடவில்லை
பெண் குழந்தை பிறந்ததால், கடந்த ஓராண்டாகவே சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்காமல் செரீனா இருந்து வந்தார். குழந்தைப் பெற்றெடுத்ததால் அவருடைய உடல் நிலையும் பாதிக்கப்பட்டது.

24வது பட்டம் கிடைக்குமா
இந்த நிலையில், 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ், இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் களமிறங்குவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அவர் பட்டம் வெல்வாரா என்பது சந்தேகமே என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications