எனக்கு 33.. பெடரருக்கும் 33.. அவரால் நிச்சயம் முடியும்... வாழ்த்தும் செரீனா!
விம்பிள்டன்: வி்ம்பிள்டன் வரலாற்றில் அதிக வயதில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ள செரீனா வில்லியம்ஸ், தன்னைப் போலவே வரலாறு படைக்கக் காத்திருக்கும் ரோஜர் பெடரருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை மிக அதிக வயதில் வென்ற வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் செரீனா. இதற்கு முன்பு இந்த சாதனை மார்ட்டினா நவரத்திலோவாவிடம் இருந்தது. தற்போது இந்த சாதனைக்குரியவர் செரீனா.
இதேபோல ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் இதேபோன்ற சாதனையை ரோஜர் பெடரர் நிகழ்த்தவுள்ளார். இன்றைய போட்டியில் அவர் வென்றால், அந்த சாதனையை படைப்பார். என்ன விசேஷம் என்றால் செரீனாவைப் போலவே பெடரருக்கும் 33 வயது என்பதுதான்.

33 வருடம் 289 நாட்கள்
செரீனாவுக்கு தற்போது 33 வருடம் 289 நாட்கள் ஆகிறது. மார்ட்டினா தனது சாதனையை நிகழ்த்தியபோது அவருக்கு வயது 33 வருடம் 263 நாட்கள் ஆகும்.

பெடரரின் புது சாதனை
இன்று பெடரர் பட்டம் வென்றால் கடந்த 41 வருடத்தில் அதிக வயதில் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையைப் படைப்பார். இன்றைய போட்டியில் ஜோகோவிக்குடன் மோதுகிறார் பெடரர்.

என்னால் முடிந்தால் அவராலும் முடியும்
பெடரர் வெற்றிக்கு செரீனா வில்லியம்ஸ் வாழ்த்துக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னால் முடியும் என்றால் நிச்சயம் அவராலும் முடியும்.

அப்பா.. என்னா ஆட்டம்
அவர் அரை இறுதியில் ஆண்டி முர்ரேவுடன் மோதிய போட்டியைப் பார்த்தேன். நம்ப முடியாத அளவுக்கு இருந்தது அவரது ஆட்டம். அவரது ஆட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது.

யார் வெல்வார்
பெடரர் - ஜோகோவிக் இவர்களில் யார் வெல்வார் என்று கேட்டால் பதில் சொல்வது கடினம். ஜோகோவிக் நம்பர் ஒன் வீரர். நடப்புச் சாம்பியனும் கூட. எனவே பதில் சொல்வது கஷ்டமானது. ஆனால் அருமையான போட்டியாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நல்லவேளை
நல்லவேளை நான் இவர்களுடன் மோதும் நிலை வந்ததில்லை. வந்தால் இவர்களை வெல்வது கஷ்டம் என்றார் செரீனா சிரித்தபடி.


Click it and Unblock the Notifications