யுஎஸ் ஓபன்-செரினாவை வீழ்த்தி பைனலில் கிளைஸ்டர்ஸ்!

நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் அவர் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை சந்தித்தார். இதில் முதல் செட்டை கிளைஸ்டர்ஸ் 6-4 என வென்றார்.
ஒரு புள்ளியை பறிகொடுத்தாலே ஆக்ரோஷம் காட்டும் செரினா முதல் செட்டை இழந்ததை அடுத்து கையில் வைத்திருந்த டென்னிஸ் ராக்கெட்டை தரையில் வீசினார். இதையடுத்து அம்பயர் அவருக்கு முதல் எச்சரிக்கை வழங்கினார்.
இந்நிலையில் இரண்டாவது செட்டில் வெற்றி பெற வேண்டும் என்ற வேகத்துடன் செரினா விளையாடினார். ஆனால், கிளைஸ்டர்ஸ் 6-5 என வெற்றியை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி கொண்டிருந்தார்.
அப்போது லைன்வுமனின் தவறான தீர்ப்பு காரணமாக ஆட்டம் மேட்ச்-பாயின்ட்டை எட்டியது. இதையடுத்து ஆத்திரமடைந்த செரினா அந்த லைன்வுமனை திட்ட தொடங்கினார். பின்னர் அவரை மிரட்டினார்.
இதை கவனித்த அம்பயர் செரினாவுக்கு இரண்டாவது எச்சரிக்கை விடுத்தார். கிராண்ட்ஸ்லாம் விதிகளின் படி ஒரு வீராங்கனைக்கு இரண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டால் அவருக்கு எதிரே விளையாடும் வீராங்கனைக்கு ஒரு புள்ளி கூடுதலாக கிடைக்கும்.
இதையடுத்து 6-4, 6-5(ஏ-40) என மேட்ச் பாயின்ட்டில் முன்னிலையில் இருந்த கிளைஸ்டர்ஸ் 6-4, 7-5 என வென்றதாக அறிவிக்கப்பட்டது. கிளைஸ்டர்ஸ், பைனலில் டென்மார்க்கை சேர்ந்த கரோலின் வொஸ்னியாகியை எதிர்கொள்கிறார்.
சாதனை தாய்...
இத்தொடரின் நான்காவது சுற்றில் செரினாவின் அக்கா வீனஸ் வில்லியம்சை வென்றார் என்பதும், கிளைஸ்டர்ஸ் கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தைக்கு தாயானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒரு குழந்தையின் தாய் ஒருவர் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பைனலுக்கு முன்னேறுவது சுமார் 29 ஆண்டுகளுக்கு பின் இதுவே முதல் முறை. முன்னதாக 1980ல் ஆஸ்திரேலியாவின் எவானி கூலாகோங் என்பவர் இந்த சாதனை படைத்திருந்தார்.
அரையிறுதியில் நடால்...
முன்னதாக நேற்று ஆண்களி பிரிவில் நடந்த காலிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 7-6, 7-6, 6-0 என சிலியின் பெர்னாண்டோ கோன்செலசை வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications