நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி மற்றும் மகேஷ் பூபதி ஜோடிகள் மோதுகின்றன. இதையடுத்து இந்தியர் ஒருவருக்கு பட்டம் உறுதியாகியுள்ளது.
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது.
நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் லுகாஸ் டௌகி ஜோடி, அமெரிக்காவின் பாப் பிரையன், மைக் பிரையன் சகோதரர்களை எதிர்கொண்டனர்.
இதில் முதல் செட்டை 6-4 என வென்ற பயஸ் ஜோடி, இரண்டாவது செட்டை 3-6 என பறிகொடுத்தது. இதையடுத்து பைனலுக்கு முன்னேறும் ஜோடியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட் பரபரப்பாக அமைந்தது. இதில் பயஸ் ஜோடி 7-6 என கடும் போராட்டத்துக்கு பின் வென்றது.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடி, பெலாரசின் மேக்ஸ் மிர்ன்யி, இஸ்ரேலின் ஆன்டி ராம் ஜோடியை சந்தித்தது. இதில் பூபதி ஜோடி 6-4, 6-2 என எளிதாக வென்று பைனலுக்கு தகுதி பெற்றது. பைனலில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் இரண்டு ஜோடி மோதுவதால் நமக்கு நிச்சயம் ஒரு பட்டம் உறுதி.
அரையிறுதியில் பெடரர்...
ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-0, 6-3, 6-7, 7-6 என்ற செட்களில் சுவீடனின் ராபின் சோடர்லிங்கை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7-6, 1-6, 7-5, 6-2 என ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்னஸ்கோவை தோற்கடித்தார்.