விம்பிள்டனைத் தாக்கியது செரீனா புயல்.. சுருண்டு வீழ்ந்தார் முகுருஸா!
விம்பிள்டன்: செரீனா வில்லியம்ஸை தடுத்த நிறுத்த இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும் போல. அரை இறுதியில் மரியா ஷரபோவாவை நசுக்கித் தூக்கிப் போட்ட செரீனா, இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஸாவை அதிரடியாக வீழ்த்தி தனது 6வது விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.
நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் இறுதியில் அனல் பறக்க ஆடினார் செரீனா. அவரது அனுபவ ஆட்டத்திற்கு முன்னால் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஸ்பெயினின் முகுருஸாவால் நிற்க முடியவில்லை. இருந்தாலும். அவரும் விடாமல் போராடிப் பார்த்தார். அந்த வகையில் அவர் ரசிகர்களின் அன்பை வென்று விட்டார்.
இறுதியில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்று தனது 6வது விம்பிள்டன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

2வது முறையாக... 4
செரீனா ஒரு புதிய வரலாறு படைக்கும் நிலையில் தற்போது உள்ளார். தற்போது அவர் ஒரே ஆண்டில் தொடர்ச்சியாக நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இப்படி அவர் செய்வது இது 2வது முறையாகும்.

இன்னொரு பட்டம் வென்றால்
தற்போது புதிய சாதனையை நோக்கி அவர் செல்கிறார். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் போட்டியிலும் அவர் பட்டத்தை வென்றால், ஒரே ஆண்டில் அத்தனை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற சாதனை அவருக்குக் கிடைக்கும்.

சூப்பர் ஸ்டார் ஸ்டெபி கிராப்
இதற்கு முன்பு டென்னிஸ் உலகின் "லேடி சூப்பர் ஸ்டார்" ஸ்டெபி கிராப் இந்த சாதனையைச் செய்துள்ளார். தற்போது அவருக்கு இணையாக உயரும் வாய்ப்பு செரீனாவுக்குக் கிடைத்துள்ளது. 1988ம் ஆண்டு ஸ்டெபி இந்த சாதனையைச் செய்து வரலாறு படைத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இன்னொரு சாதனையும் காத்திருக்கு
அது மட்டுமல்லாமல் அமெரிக்க ஓபனில் செரீனா வென்றால் ஸ்டெபி வைத்துள்ள 22 முக்கிய கிராண்ட்ஸ்லாம் வெற்றி என்ற சாதனையையும் சமன் செய்ய முடியும்.

கண்ணீர் விட்ட கார்பின்
முன்னதாக தோல்வியுற்ற 21 வயதேயான கார்பின் முகுருஸா ஏமாற்றம் தாங்க முடியாமல் தனது சேரில் உட்கார்ந்து அழுதார். இருப்பினும் சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டு சகஜ நிலைக்குத் திரும்பினார்.

ரசிகர்களைக் கவர்ந்த முகுருஸா
இறுதிப் போட்டியில் முகுருஸா தோல்வியுற்றாலும் கூட இந்தத் தொடரில் அவர் நிறைய ரசிகர்களைச் சம்பாதித்து விட்டார். அவரது அழகான ஆட்டம், போராட்ட குணம் ஆகியவை ரசிகர்களைக் கவர்ந்து விட்டது. வரும் நாட்களில் முகுருஸா டென்னிஸ் உலகைக் கலக்குவார் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications