சாதனை.. வங்கதேசத்தை சாய்த்த ஆஃப்கானிஸ்தான்.. சைலண்ட் சம்பவத்தை செய்து அபாரம்!
டாக்கா: வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஃப்கானிஸ்தான் அனி வெற்றிபெற்றதோடு, 2015ஆம் ஆண்டுக்கு பின் வங்கதேச அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இரண்டாவது என்ற சாதனையையும் படைத்துள்ளது.
வங்கதேசத்திற்கு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஃப்கானிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதில் டெஸ்ட் தொடரை வங்கதேச அணி கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணி சார்பாக குர்பாஸ் - இப்ராஹிம் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இரு வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். இதனால் முதல் விக்கெட்டுக்கு 256 ரன்கள் குவிக்கப்பட்டது. சிறப்பாக ஆடிய குர்பாஸ் 125 பந்துகளில் 8 சிக்சர்கள் மற்றும் 13 பவுண்டரிகள் உட்பட 145 ரன்கள் விளாசி அசத்தினார்.
அதேபோல் இப்ராஹிம் 119 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். பின்னர் வந்த வீரர்களும் அதிரடியை தொடர்ந்ததால் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 331 ரன்கள் குவித்தது. இதையடுத்து 332 ரன்கள் என்ற கடின இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. இதுபோன்ற மிகப்பெரிய இலக்கை விரட்டும் போது தொடக்க சரியாக அமைய வேண்டும். ஆனால் வங்கதேச அணி கேப்டன் லிட்டன் தாஸ் 13 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஷாண்டோ 1 ரன்னிலும், நைம் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் வங்கதேச அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் வந்த ஷகிப் அல் ஹசன் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, முஷ்ஃபிகுர் ரஹிம் மட்டுமே கடைசி வரை போராடினார். நிதானமாக ஆடிய அவர் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் வங்கதேச அணி 43.2 ஓவர்களுக்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் வங்கதேச மண்ணில் முதல்முறையாக ஆஃப்கானிஸ்தான் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
2015ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின் வங்கதேச அணி இங்கிலாந்து அணியிடம் மட்டுமே சொந்த மண்ணில் தோல்வியடைந்தது. இந்த 8 ஆண்டுகளில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா என்ற சுற்றுப்பயணம் செய்த அத்தனை அணிகளையும் வங்கதேசம் வீழ்த்தியது. ஆனால் வங்கதேசத்தை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி 2-0 என்ற வென்றுள்ளது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications