நான் இறந்துவிடுவேன் என நினைத்தேன்..இந்த நோயால் பாத்ரூம்க்கு கூட நடந்து செல்ல முடியாது- உஸ்மான் கவாஜா
மும்பை: ஆஸ்திரேலிய அணியின் அனுபவமிக்க தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா, தாம் Rheumatoid Arthritis எனும் தீவிர மூட்டுவாத நோய் பாதிப்புடன் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
22 வயதில் இந்த நோய் பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டபோது, தீவிர வலியால் பாத்ரூம்க்கு 10 மீட்டர் தூரம் கூட நடக்க முடியாமல் தவித்ததாகவும், தனது கிரிக்கெட் கனவு முடிவுக்கு வந்துவிட்டதோ மற்றும் தாம் உயிரிழந்துவிடுவோம் என்ற அச்சம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான சூழலையும் கடந்து ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 88 டெஸ்ட், 40 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி கவாஜா சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து பேசிய புஜாரா, நோய் கண்டறியப்பட்ட புதிதில், தனது உடல்நிலை குறித்த தகவலை ஆஸ்திரேலிய அணியின் மருத்துவக் குழு மற்றும் பயிற்சியாளர்களை தவிர வேறு யாரிடமும் அவர் தெரிவிக்கவில்லை. அணியில் இருந்த தனது நெருங்கிய நண்பர்களிடம்கூட இந்த விஷயத்தைப் பாதுகாத்து வந்துள்ளார்.
நோய் பாதிப்பை சொன்னால் அனுதாபத்துடன் பார்ப்பார்களோ அல்லது அணித் தேர்வில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம் எனக் கூறியுள்ளார். இருப்பினும், நவீன மருத்துவ சிகிச்சையான 'பயோலாஜிக்' ஊசிகள் மூலம் தனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான சிகிச்சையே தனது வாழ்க்கையையும் கிரிக்கெட் பயணத்தையும் மீட்டுக் கொடுத்ததாகக் கவாஜா நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.
தம்மை போல ஆர்த்ரைடிஸ் போன்ற நோய் பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும், சரியான மருத்துவ பராமரிப்பு இருந்தால் விளையாட்டிலும் வாழ்க்கையிலும் உச்சத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையைத் தனது விளையாட்டு பயணம் தரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முதன்மை உள்நாட்டு தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகளின் தரத்தையும் மதிப்பையும் பலர் குறைத்து மதிப்பிடுவது குறித்து கவாஜா தனது கவலையைப் பதிவு செய்தார். கடினமான சூழ்நிலைகளைக் கொண்ட இந்த உள்நாட்டுத் தொடரில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களுக்குத் தேசிய அணியில் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த 47 இன்னிங்ஸ்களாக டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்காமல் தடுமாறி வரும் மார்னஸ் லபுஷேனின் சராசரிக்கு நிகராக, உள்நாட்டுத் தொடர்களில் பல இளம் வீரர்கள் தொடர்ந்து ரன்களைக் குவித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, 6 சதங்களுடன் 38 ரன்கள் சராசரி வைத்துள்ள ஜேக் கிளேட்டன் போன்ற திறமைமிக்க இளம் வீரர்களின் பங்களிப்பு உரிய முறையில் பேசப்படுவதில்லை என்று கவாஜா தெரிவித்தார்.
உள்நாட்டுத் தொடர்களில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் வீரர்களுக்குத் தேசிய அணித் தேர்வில் நியாயமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.


Click it and Unblock the Notifications


