ரோஹித் சர்மாவை மோசமாக நடத்திய பிசிசிஐ.. “ஓய்வை அறிவிப்பதும், அறிவிக்காமல் போவதும் உங்க பிரச்சனை”
லண்டன்: தன்னை இனி ஒருநாள் அணியில் தேர்வு செய்யப் போவதில்லை என பிசிசிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதால் ரோஹித் சர்மா கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கான அணியை உருவாக்கும் பணியில் பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளது.
2027 உலகக் கோப்பையின் போது ரோஹித்துக்கு 40 வயதைக் கடந்துவிடும். மேலும், சிறப்பான ஃபார்மில் இருக்கும் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீண்ட நாட்களாக வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். இதைக் கருத்தில் கொண்டு, கடந்த வாரம் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வு குழுவினர் ரோஹித் சர்மாவை நேரில் சந்தித்து நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அப்போது, இனி எதிர்காலத் திட்டங்களை நோக்கி நகர உள்ளதால், ஒருநாள் அணியில் அவருக்கு இடம் இல்லை என்பதைத் தேர்வு குழுவினர் நேரடியாகத் தெரிவித்துவிட்டனர். இங்கிலாந்து தொடரின் இடையில் பிசிசிஐ அதிகாரிகளிடம் இது குறித்துப் பேசிய ரோஹித் சர்மா, இந்த முடிவால் கடும் அதிருப்தியில் இருப்பதாக இந்திய அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரோஹித் சர்மா முறைப்படி தனது ஓய்வை அறிவிப்பதும், அறிவிக்காமல் இருப்பதும் அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் லார்ட்ஸ் போட்டிக்குப் பிறகு அவர் ஒருநாள் அணிக்குத் தேர்வு செய்யப்பட மாட்டார் என்ற செய்தி அவருக்குத் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, டெஸ்ட் அணியில் இருந்தும் இதே போன்ற அழுத்தத்தால் தான் ரோஹித் ஓய்வை அறிவித்தார். தற்போது அது ஒருநாள் போட்டிகளிலும் தொடர்கிறது.
முன்னதாக 2025 மே 7 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், அதற்கு முன்பாக டி20 கிரிக்கெட்டில் இருந்தும் ரோஹித் ஓய்வு பெற்றார். இதுவரை 286 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 11731 ரன்களைக் குவித்து இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த தொடக்க வீரராகத் திகழ்கிறார்.
56 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ள ரோஹித் சர்மா, தனது அதிரடி ஆட்டத்தால் 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு அணியை அழைத்துச் சென்றதுடன், 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

