மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், அணியில் உள்ள சீனியர்களுக்கு கல்தா கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் முதல் பலியாடாக அனுபவ வீரர் புஜாரா ஆக்கப்பட்டார். வெஸ்ட் இண்டிஸ் தொடருக்கான இந்திய அணியில் புஜாரா அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில் அடுத்த ஸ்டார் வீரரான ரகானேவுக்கும் செக் வைக்கப்பட்டிருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், ருதுராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் புஜாராவுக்கு பதில் ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வேறு திட்டத்தை தீட்டி இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும் ஜெய்ஸ்வாலும் களம் இறங்கியிருக்கிறார்கள்.
ஜெய்ஸ்வால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க வீரராக தான் விளையாடி இருக்கிறார். மேலும் பயிற்சி ஆட்டத்தில் அவர் அரை சதம் அடித்தார். இதனால் இதுவரை தொடக்க வீரராக களம் இறங்கி வந்த சுப்மன் கில் நடு வரிசையில் விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அப்படி கில் நடுவரிசையில் வந்தால் அவருக்கு எந்த இடம் வழங்கப்படும் என்ற சந்தேகம் எழுந்தது.
விராட் கோலி நான்காவது வீரராக விளையாடுகிறார். மேலும் ரகானே ஐந்தாவது வீரராக இருக்கிறார். கில் அனுபவம் குறைந்த வீரர் என்பதால் புஜாரா இடத்தை அவரை களம் இறக்காமல் ஐந்தாவது வீரருக்கான இடத்தில் விளையாட வைக்க அணி நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரகானே தன்னுடைய இடத்தை தியாகம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இது ரஹானேக்கு வைத்த செக்காக பார்க்கப்படுகிறது.
தற்போது ரகானே மூன்றாவது வீரராக களம் இறக்கப்பட்டு அவர் அந்த இடத்தில் சொதப்பினால், இதனை காரணம் காட்டி அணியை விட்டு அவரை தூக்கி விடலாம். மீண்டும் அந்த இடத்திற்கு ருதுராஜை கொண்டு வரலாம் என்பதே இந்திய அணியின் பிளானாக இருக்கிறது. இது சீனியர் வீரர்களுக்கு கொடுக்கப்படும் தேவையில்லாத நெருக்கடியாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரஹானே உடைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.