சென்னை: ஐபிஎல் தொடரில் முன்னணியில்இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை, இன்று சென்னையில் நடைபெறும் போட்டியில் சந்திக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஆரம்பத்தில் சறுக்கினாலும் கடந்த சில போட்டிகளில் வீறு கொண்டு எழுந்து வெளுத்து வாங்க ஆரம்பித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். அதேசமயம், ஆரம்பத்திலிருந்தே அடித்து நொறுக்கி வருகிறது மும்பை - ஒரு போட்டியில் தோற்றதைத் தவிர.
சந்தித்த 8 போட்டிகளில் ஏழில் வென்று 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது மும்பை. அதேசமயம், 9 போட்டிகளில் மோதி 4 ல் வென்று, ஐந்தில் தோற்று 8 புள்ளிகளுடன் உள்ளது சென்னை.
கேப்டன் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அசாத்தியமான பலத்துடன் அசத்திக் கொண்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸும் ஆரம்பத்தில் தடுமாறினாலும் தற்போது புது பலத்துடன் புலியாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது.
டெண்டுல்கரின் அபாரமான கேப்டன்ஷிப்பால், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர்கள், அழகாக ஆடி வருகிறார்கள். தட்டிக் கொடுத்து அவர்களின் திறமையை வெளிக் கொண்டு வந்து திறமையாக செயல்பட்டு வருகிறார் டெண்டுல்கர்.
நெருக்கடியான நேரத்திலும் கூட திறமையுடன் ஆடி வருகின்றனர் மும்பை வீரர்கள். டெண்டுல்கரும் கூட கலக்கிக் கொண்டிருக்கிறார். நான்கு அரை சதங்களுடன் அட்டகாசமான ரன் குவிப்புடன் நல்ல முன்னுதாரணமாக திகழ்கிறார் டெண்டுல்கர்.
போலார்ட், பிரேவோ, லசித் மலிங்கா, ரியான் மெக்லாரன் ஆகியோரின் ஆட்டம் மும்பை அணிக்கு பேருதவியாக உள்ளது. அதேபோல ஹர்பஜன் சிங்கும் தன் பங்குக்கு அணிக்கு உதவிக் கொண்டிருக்கிறார்.
அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸும் சும்மா இல்லை. முரளி விஜய்யின் ருத்ரதாண்டவத்தால் எதிரணியினர் ஆடிப் போயுள்ளனர். அதேபோல மாத்யூ ஹெய்டன், அல்பி மார்க்கல், சுரேஷ் ரெய்னா ஆகியோரும் அணிக்கு நல்ல தூன்களாக விளங்கி வருகின்றனர்.
போலிங்கரின் வருகையால் சென்னை அணியின் பவுலிங் பலமாகியுள்ளது. முத்தையா முரளீதரனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தொடக்கத்திலிருந்தே சிறப்பாக பந்து வீசி வருகிறார் முரளி.
இன்றைய போட்டியிலும் முரளி விஜய் உள்ளிட்டோர் சிறப்பாக ஆடினால் சென்னைக்கு வெற்றி நிச்சயம். ஆனால் கொஞ்சம் அசந்தால் கூட மும்பை வெற்றியைப் பறித்துக் கொண்டு போய் விடும்.