மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டுள்ள நிலையில், சூசகமாக தனது பதிலை சமூக வலைதளங்களில் ஒரேயொரு வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் ஓய்வுபெற்ற போது, அவரது இடத்தில் களமிறக்கப்பட்டவர் புஜாரா. கிட்டத்தட்ட ராகுல் டிராவிட் விட்டுச்சென்ற பணிகளை மிகச்சிறப்பாக செய்து வந்துள்ளார். 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, 7 ஆயிரத்திற்கும் அதிக ரன்களை விளாசியுள்ளார். குறிப்பாக இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் இரு முறை அடைந்த தொடர் வெற்றிகளுக்கு புஜாரா முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக புஜாராவின் பேட்டிங் ஃபார்ம் மோசமாகியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வுயடைந்ததால், இளம் வீரர்களை இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இதையடுத்து புஜாரா நீக்கப்பட்டு, இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் புஜாராவை நீக்கியதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோர் மோசமாக ஆடி வந்த நிலையில், புஜாரா மட்டும் பலியாடாக மாற்றப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டப் பின்னர் புஜாரா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக, மீண்டும் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியுள்ள வீடியோவை மட்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க வாழ்த்தி வருகின்றனர்.
இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட புஜாரா, துலீப் டிராவியில் மேற்கு மண்டல அணிக்காக களமிறங்க உள்ளார். இதே அணியில் சூர்யகுமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின் நீண்ட நாட்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணி விலகி இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்குள் புஜாரா தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.