Cricket Records - அதிக முறை டக் அவுட் ஆன இந்திய வீரர்கள் பட்டியலில் 3 டாப் பேட்ஸ்மேன்கள்
மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய வீரர்கள் வரிசையில் விராட் கோலி முதல் ஐந்து இடங்களில் இருக்கிறார். அவரைத் தவிர மேலும் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்கள் முதல் ஏழு இடங்களில் இடம் பெற்றுள்ளனர்.
சர்வதேச ஒரு நாள் போட்டி, டி20 போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக அதிக முறை டக் அவுட் ஆன இந்திய வீரர்கள் பட்டியலில் ஜாகிர் கான் முதல் இடத்தில் இருக்கிறார். வேகப் பந்துவீச்சாளரான அவர் பேட்டிங்கில் மோசமான வீரராக அறியப்பட்டார். அவர் 44 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய வீரர் அவர்தான்.

இரண்டாவது இடத்தில் மற்றொரு வேகப் பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா இருக்கிறார். தனது கடைசி சில போட்டிகளில் பேட்டிங்கில் அதிக பந்துகளை சந்தித்து கை கொடுத்த இஷாந்த் சர்மா அதற்கு முன் மிக மோசமான பேட்டிங் செயல்பாட்டை கொண்டு இருந்தார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 40 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார்.
மூன்றாவது இடத்தில் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இருக்கிறார். அவர் 37 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். ஹர்பஜன் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு சதம் மற்றும் ஒன்பது அரை சதங்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் வந்தவுடன் அதிரடியாக ஆட வேண்டும் என்ற மனநிலையில் அவர் பேட்டிங் ஆடிய காரணத்தால் பலமுறை டக் அவுட் ஆகி இருக்கிறார்.
இந்த வரிசையில் ஹர்பஜன் சிங் உடன் மூன்றாவது இடத்தை விராட் கோலி பகிர்ந்து கொண்டுள்ளார். உலகின் முன்னணி பேட்ஸ்மேனாக அறியப்படும் விராட் கோலி 591 இன்னிங்ஸ்களில் பேட்டிங் ஆடி 26,942 ரன்கள் சேர்த்துள்ளார். அதே சமயம் 37 முறை அவர் டக் அவுட்டும் ஆகி இருக்கிறார்.
இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பவர் அனில் கும்ப்ளே இருக்கிறார். அவர் 35 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். அனில் கும்ப்ளே சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஆகச் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 34 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். அவர் இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார். அவர் 782 இன்னிங்க்ஸ்களில் 34 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 33 டக் அவுட்டுகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டின் மூன்று முக்கிய பேட்ஸ்மேன்களான விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய மூவரும் அதிக டக் அவுட் ஆன இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் ஏழு இடங்களில் இடம்பெற்று இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தலாம். எனினும், அவர்கள் அதிக போட்டிகளில் ஆடியதும், டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ததும் அதிக முறை டக் அவுட்டாக முக்கிய காரணமாகும்.


Click it and Unblock the Notifications