மும்பை: ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கில் கிளார்க் உடனான நேர்காணலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் தோல்வி, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பெஞ்ச் செய்யப்பட்டது, சாம்பியன்ஸ் டிராபி வெற்றி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
பியாண்ட் 23 கிரிக்கெட் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் மைக்கில் கிளார்க் உடனான நேர்காணலில் ரோஹித் சர்மா பல்வேறு விஷயங்கள் பேசி இருக்கிறார். அதில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக நாங்கள் ஏராளமான பின்னடைவுகளை சந்தித்தோம். சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தோம். ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தோம்.

அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்ததால், கம்பேக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினோம். கிரிக்கெட் என்பது தனி மனித விளையாட்டு அல்ல. இதில் எப்போது என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான அறிவுடன் இருப்பது அவசியம். வெல்வதற்கான வழி என்ன என்பதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
சாதாரணமாக ஐசிசி தொடரை வெல்ல வேண்டும் என்பதை யார் வேண்டுமானாலும் சொல்லிவிடலாம். ஆனால் எப்படி வெல்லப் போகிறீர்கள் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இந்திய அணிக்காக ஆடிய அத்தனை வீரர்களிடம் அந்த தெளிவு இருந்தது என்பேன். ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஆடிய அதே அணியுடன் தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விளையாடினோம்.
அதனால் காயம் காரணமாக பும்ரா மட்டுமே விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவா என்று கேட்டால், ஆம். ஆனால் ஒரு அணியாக ஒரு வீரர் அல்லது 2 வீரர்களை சார்ந்து இருக்க கூடாது. ஓய்வறையில் அமர்ந்திருக்கும் போது எங்கள் அனைவருக்குள்ளும் இந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வோம்.
அதனால் இந்திய அணியில் எப்போதும் யாரை சார்ந்தும் இருந்ததில்லை. ஒவ்வொரு வீரரிடம் இருந்தும் பங்களிப்பு அளிக்க வேண்டிய தேவை வந்தது. அதனை இந்திய அணியில் இருந்த வீரர்கள் கூறினர். கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது, கோப்பையை வெல்ல வேண்டும், இந்திய அணியுடன் நேரம் செலவிட வேண்டும், அவர்களுடன் நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் தோன்றும்.
ஆனால் கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களை பொறுத்தவரை ரன்களை சேர்ப்பது மட்டும்தான் என்று யோசிப்போம். ஒவ்வொரு போட்டியிலும் அதிக ரன்களை சேர்க்க வேண்டும், அழுத்தமான சூழல்களில் ரன்களை சேர்க்க வேண்டும் என்று நினைப்போம் ஒரு கட்டத்தில் ஒரு அணியாக விளையாடும் போது ரன்களை சேர்ப்பதை விடவும் அதிக கோப்பைகளையும், வெற்றிகளை பெற வேண்டும் என்று சிந்திப்போம் என்றார்.
தொடர்ந்து, ஆஸ்திரேலியா தொடர் குறித்து பேசுகையில், சிட்னி டெஸ்ட் போட்டியில் நான் களமிறங்கவில்லை. என்னை நானே பெஞ்ச் செய்து கொண்டேன். அதுதான் இந்திய அணிக்கும் கடைசி ஆட்டமாக அமைந்தது. அந்த டெஸ்ட் தொடரில் என்னால் பந்தை சரியாக அடிக்க முடியவில்லை என்ற உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். நான் மட்டுமல்லாமல் இன்னும் சில வீரர்களும் ரன்கள் சேர்க்க முடியாமல் திணறினர்.
அந்த நேரத்தில் நாமும் அணிக்குள் இருந்தால், சிக்கல் அதிகமாகிவிடும். அதேபோல் சுப்மன் கில்லை நிச்சயமாக களமிறக்க வேண்டும் என்று ஆலோசித்தோம். ஏனென்றால் அதற்கு முந்தைய டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடவில்லை. அந்த என்னால் சிறந்த கிரிக்கெட்டை விளையாட முடியவில்லை என்று ஒப்புக் கொள்வேன். ஆனால் நிச்சயம் வரும் காலங்களில் என்னால் ரன்களை சேர்க்க முடியும்.
இதுதொடர்பாக பயிற்சியாளர் மற்றும் தேர்வு குழுத் தலைவர் ஆகியோரிடம் ஆலோசித்தேன். அந்த ஆலோசனை நாள் முழுவதும் சென்றது. எப்போதும் ஒரு அணிக்கு என்ன தேவையோ, அதனை பொறுத்தே முடிவு எடுக்கப்பட வேண்டும். சில நேரங்களில் அந்த முடிவு சரியானதாக அமையலாம். சில நேரங்களில் மோசமான முடிவாக கூட இருக்கலாம். கிரிக்கெட் அப்படிதான் இருக்கும்.
ஒரு முயற்சியை மேற்கொள்ளும் போது, அது கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதற்கு எந்த கியாரண்டியும் கிடையாது. ஆஸ்திரேலியா மண்ணில் அடுத்தடுத்து 2 முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளோம். அந்த வெற்றி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தங்கத்திற்கு நிகரானது. அந்த 2 தொடர்களிலும் அனைத்து வீரர்களும் தங்களின் சிறந்த பங்களிப்பை அளித்தனர். அது எப்போதும் ஸ்பெஷல்தான் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மைக்கில் கிளார்க், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாட வாழ்த்துகள் என்று கூற, அதற்கு ரோஹித் சர்மா, என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக ஐபிஎல் தொடருக்கு பின் இங்கிலாந்துக்கு 5 போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.
அந்த டெஸ்ட் தொடருக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு பின் ரோஹித் சர்மாவுக்கு இனி இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காது என்று பார்க்கப்பட்டது. இதனால் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பும்ரா நியமனம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது.
ஆனால் பும்ராவின் காயம் காரணமாக இந்திய அணி மீண்டும் ரோஹித் சர்மா பக்கம் திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 38 வயதாகும் ரோஹித் சர்மா நீண்ட மாதங்களாக அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்து வருகிறார். வங்கதேச டெஸ்ட் தொடர் தொடங்கி தற்போது ஐபிஎல் தொடர் வரை ரோஹித் சர்மா சொல்லிக் கொள்ளும்படியாக பெரிய இன்னிங்ஸை விளையாடவில்லை. இதனால் பிசிசிஐ நிர்வாகம் ரோஹித் சர்மாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் தேர்வு செய்யக் கூடாது என்ற குரல்கள் எழுந்துள்ளது.
அவருக்கு மாற்றாக சாய் சுதர்சன், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஏனென்றால் 2 ஆண்டுகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிவடையும் போது ரோஹித் சர்மா 40 வயதை எட்டிவிடுவார். இப்போதே அவரின் ஃபிட்னஸ் மோசமாக உள்ளதால், வரும் காலங்களில் அவரால் ஓட முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில், நிச்சயம் அடுத்த கட்ட இந்திய அணியை தயார் செய்ய முடியும். இதனால் பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.