சோனமுத்தா போச்சா..? ஐபிஎல் தொடரில் டெஸ்ட் மேட்ச் ஆடும் டோணி.. ஃபேர்வெல் கொடுக்க ரெடியாகிறது புனே
புனே: ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறார் டோணி. விரைவிலேயே புனே சூப்பர் ஜியான்ட் அணியிலிருந்து அவருக்கு கல்தா கொடுக்கப்படும் என்ற பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் உலவுகிறது.
சி.எஸ்.கே அணிக்கு 2 வருடம் தடை விதிக்கப்பட்டதும், புனே அணிக்காக ஆட ஒப்பந்தம் செய்யப்பட்ட டோணி, அங்கும் கேப்டனாக தொடர்ந்தார். ஆனால் கடந்த வருடம் ஐபிஎல் போட்டித்தொொடரில் புனே 7வது இடத்தைதான் பிடித்தது.
சி.எஸ்.கே அணி கேப்டனாக திறம்பட செயல்பட்டவர் டோணி. சி.எஸ்.கே பங்கேற்ற 8 தொடர்களில் ஒன்றில் கூட பிளே-ஆப் சுற்று போகாமல் இருந்ததில்லை. ஆனால் புனே நிலை தலைகீழானது.

சொதப்பல்கள்
இதையடுத்து இவ்வாண்டு ஐபிஎல் தொடரில் டோணி கேப்டன் பதவியிலிருந்து விலக்க வற்புறுத்தப்பட்டார். ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக்கப்பட்டார். ஆனால், இவ்வாண்டு பேட்டிங்கிலும் டோணி சொதப்பி வருகிறார்.

15 ரன் சேர்க்கவே படாதபாடு
மும்பை இந்தியன்சுக்கு எதிராக 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து நாட்அவுட்டாக நின்றார், டோணி. கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் முக்கியமான நேரத்தில் கை கொடுக்க வேண்டிய டோணி 14 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே சேர்த்து வெளியேறினார்.

ஸ்டிரைக் ரேட்
டி20 போட்டிகளில், ரன் சராசரியை விடவும், ஒரு பேட்ஸ்மேனுக்கு முக்கியமானது, ஸ்டிரைக் ரேட்தான். 130க்கு மேல் ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் வீரரை கண்டாலே எதிரணி பயப்படும். ஆனால், நடப்பாண்டு ஐபிஎல்லில் டோணியின் ஸ்டிரைக் ரேட் 65.12 மட்டுமே. அதாவது 100 பந்துகளை சந்தித்தால் சுமார் 65 ரன்தான் இவரால் சேர்க்க முடியும். இப்போதெல்லாம் டெஸ்ட் போட்டிகளிலேயே பேட்ஸ்மேன்கள் இந்த ஸ்டிரைக் ரேட்டைவிட அதிகமாக வைத்துள்ளனர்.

வாய்புகள் வீண்
களத்தில் நிற்க வாய்ப்பு கிடைத்தும்கூட, எந்த ஒரு போட்டியிலும் 15 ரன்களை கூட எட்ட முடியாமல் திணறுகிறார் டோணி. களத்தில் இறங்கியதும், "டோணி.. டோணி.." என்று கத்தி வெறியாட்டம்போடும் அவரது ரசிகர்களுக்கு வேண்டுமானால் இந்த புள்ளி விவரம் பெரிதாகப்படாமல் இருக்கலாம். ஆனால் அணி நிர்வாகமோ இதை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

கல்தா கேரண்டி
புனே அணி உரிமையாளரின் சகோதரரான ஹர்ஷ் கோயங்கா ஏற்கனவே தனது முனகலை சோஷியல் மீடியாவில் வெளிக்காட்டிவிட்டார். இன்னும் ஒன்றிரண்டு போட்டிகளிலும், இதேபோல டோணி ஹெலிகாப்டர் பறக்காவிட்டால், அடுத்ததாக அந்த ஹெலிகாப்டர் 2018 ஐபிஎல் தொடரின்போது சென்னையில்தான் வந்து களமிறங்க வாய்ப்புள்ளது. புனே ஜெர்சியில் டோணியை பார்க்க வேண்டுமானால் இப்போதே நன்கு பார்த்துக்கொள்ளவும் ரசிக சிகாமணிகளே.


Click it and Unblock the Notifications