நெருங்கும் டி20 உலகக்கோப்பை.. மும்பை பயிற்சியாளரை தூக்கிய இங்கிலாந்து.. தோல்வியால் நடந்த மாற்றம்!
லண்டன்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பொல்லார்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை நடக்கவுள்ளது. இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. 20 அணிகளும் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டு, அதன்பின் சூப்பர் 8 மற்றும் அரையிறுதி சுற்று போட்டிகள் நடக்கவுள்ளன. இன்னும் 6 மாதங்களே இருப்பதால், பல்வேறு அணிகளும் வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் செய்ய தீவிரமாக உள்ளன.

அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் இழந்தது. டி20 கிரிக்கெட் சாம்பியனான இங்கிலாந்து அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களின் சூழல், பிட்சின் செயல்பாடுகள் குறித்து இங்கிலாந்து அணி நிர்வாகம் கவனத்தில் கொண்டுள்ளது.
அதற்கேற்ப ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்களையும், கட்டர்ஸ் பந்துகளை வீசக் கூடிய பவுலர்களையும் தேடி பிடித்து வருகிறது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் சூழலில், இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அட்டகாசமான ஒரு நகர்வை மேற்கொண்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவானான பொல்லார்டை இங்கிலாந்து அணிக்கு துணை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக பொல்லார்ட் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 2012ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ள பொல்லார்ட், 600க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளார். அதேபோல் உலகம் முழுவதும் சென்று பல்வேறு லீக் போட்டிகளில் தற்போதும் பொல்லார்ட் விளையாடி வருகிறார்.
அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ள பொல்லார்ட், வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் குறித்து நுணுக்கமான அறிவை பெற்றவர். இதன் மூலம் 6 மாதத்திற்கு முன்பாகவே இங்கிலாந்து அணி டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து திட்டமிட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Story first published: Sunday, December 24, 2023, 20:20 [IST]
Other articles published on Dec 24, 2023


Click it and Unblock the Notifications