மும்பை: உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி வெறும் 6 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனை மங்காத்தா படத்தில் வைபவ், நாங்க மொத்தமாக 5 பேரு.. நான்.. தாராவி எஸ்ஐ கணேஷ், பார் ஓனர் மஹத், மஹத் நண்பன் பிரேம்.. அப்றம் கடைசியா தான் வந்தாரு விநாயக் என்று வசனம் வரும். அதனை மாற்றி, "நாங்கள் மொத்தமாக 5 பேரு.. நான் (சிராஜ்), பும்ரா, ஜடேஜா, குல்தீப்.. அப்புறம் கடைசியாக தான் வந்தார் முகமது ஷமி" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ் ரகம்.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதத்தை விளாசி சாதனை படைத்தார். அதன்பின்னர் அரங்கில் இருந்த சச்சின் டெண்டுல்கரை பார்த்து, மரியாதை செய்து நன்றி கூறினார். இதனை லியோ சக்சஸ் மீட்டில் விஜய் சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருத்தர் தான் என்று சொல்லி இருப்பார். அதனை மாற்றி விராட் கோலி, "மாஸ்டர் பிளாஸ்டர்"னா அது ஒருத்தர் தான் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல் ரகம்.

உலகக்கோப்பை தொடரின் தொடக்கத்தில் நடந்த சில போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்பார்த்த அளவிற்கு ரன்கள் சேர்க்கவில்லை. ஆனால் தற்போது தொடர்ச்சியாக 2 சதங்களை விளாசி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனை கவுண்டமணி நம்பியாரிடம், "வேலையை விட்டுவிட்டு போனது தப்பிதான் அய்யா" என்று செருப்புடன் மன்னிப்பு கேட்பார். அந்த காட்சியை மாற்றி ரசிகர்கள் ஸ்ரேயாஸ் ஐயரிடம், உங்களை சந்தேகப்பட்டது தப்புதான் அய்யா என்று சொல்வதாக உருவாக்கப்பட்ட மீம் குபீர் ரகம்.

நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா தொடக்கத்தில் ஆடிய அதிரடி ஆட்டம் பின் வரும் வீரர்கள் அழுத்தமின்றி ரன்கள் சேர்க்க காரணமாக அமைந்தது. சிறப்பாக ஆடிய அவர், 29 பந்துகளில் 4 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 47 ரன்கள் சேர்த்தார். இதனை தீனா படத்தில் லைலா அஜித் குமாரிடம் போன் செய்து, உங்களோட தொழில் என்ன என்று கேட்பார். அதற்கு அவர், அடித்தல், உதைத்தல், குத்தல் என்று பதில் அளிப்பார். அதுபோல், ரசிகர்கள் உங்களோட ஓபனிங் பிளான் என்னவா இருக்க போகிறது அரையிறுதியில் என்று கேட்பதாகவும், அதற்கு ரோகித், அடித்தல்.. உதைத்தல்.. குத்தல் என்று பதில் அளிப்பது போலவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் அதிரடி ரகம்.

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அன்றைய நாளில் இந்திய அணி ரசிகர்கள் மட்டுமல்லாமல் வீரர்களும் கண்ணீர் சிந்தினர். தற்போது சொந்த மண்ணில் வைத்து நியூசிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது இந்தியா. இதனை வாரிசு படத்தில் வரும், "இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல்.