மும்பை: சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அபார பவுன்சர் பந்தை வீசி விக்கெட் வீழ்த்திய வீடியோவுக்கு முன்னாள் நட்சத்திர வீரர் யுவ்ராஜ் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அரசியல், சினிமா உள்ளிட்டவற்றில் வாரிசுகள் எளிதாக வெற்றிபெற முடிந்தாலும், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் வாரிசுகள் வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை. அதனை மாற்ற கடுமையாக முயற்சித்து வரும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். சில காலம் முன்பே மீடியா வெளிச்சம் சச்சின் மகன் மீது விழுந்தாலும், அவரின் ஆட்டம் சச்சின் அளவிற்கு இல்லை.

பின்னர் படிப்படியாக மும்பை அணியின் நெட் பவுலராக இருந்து, ரஞ்சி டிராபியில் கோவா அணிக்காக சதம் விளாசி ஆல் ரவுண்டராக நிரூபித்த பின்னரே அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ரூ.30 லட்சத்திற்கு ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர், சில ஆண்டுக்ளாக பெஞ்சிலேயே உட்கார வைக்கப்பட்டார்.
ஒரு கட்டத்தில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்று பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சீசனில் முக்கிய வீரர்கள் காயமடைந்ததால், மும்பை அணி அடுத்தடுத்து தோல்வியடைந்து வருகிறது. இதனால் ரசிகர்களின் கவனத்தை திருப்ப, அர்ஜுன் டெண்டுல்கரை பிளேயிங் லெவனில் சேர்த்து ஆச்சரியத்தை கொடுத்தது.
ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர், 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், மோசமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தவில்லை என்று சொல்லலாம். அவரின் பந்துவீச்சில் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று பெரும்பாலான விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் தியோதார் டிராபி தொடரில் அர்ஜுன் டெண்டுல்கர் தென் மண்டல அணிக்காக விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் ஒரு போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய ஒரு பவுன்சர் பந்து பேட்ஸ்மேன்களை நிலை குலைய வைத்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் பேட்ஸ்மேனின் பேட்டில் அடித்து விக்கெட் கீப்பரிடம் பந்து தஞ்சமானது.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அர்ஜுன் டெண்டுல்கர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை பார்த்த யுவராஜ் சிங், அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்து வெடிகுண்டு எமோஜி ஒன்றை கமெண்ட் செய்துள்ளார்.