கிளென் மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு.. ஆஸ்திரேலிய ரசிகர்கள்சோகம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இதன் மூலம் அவரது 14 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. உலகளவில் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களைக் கவர்ந்த சிறந்த வீரர்களில் ஒருவராக மேக்ஸ்வெல் திகழ்ந்தார்.
சர்வதேச போட்டிகளிலிருந்து மேக்ஸ்வெல் விலகியதற்கு காரணம், அவர் தனது பழைய பேட்டிங் பார்மை கண்டு எடுக்க முடியாமல் திணறினார். டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், 2025 ஜூன் மாதம் இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரைஇறுதிப் போட்டிக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்றார்.

தொடர்ந்து, ஏப்ரல் 2026-இல் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் 2026-27 ஒப்பந்தப் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார். பின்னர் மே-ஜூன் மாதங்களில் நடைபெற்ற வங்கதேச தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் அவர் இடம்பெறவில்லை. பிப்ரவரி 20, 2026 அன்று டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் ஓமனுக்கு எதிராக விளையாடியதே ஆஸ்திரேலியாவுக்காக அவரது கடைசி சர்வதேச போட்டியாகும்.
மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணிக்காக மொத்தம் 286 சர்வதேச போட்டிகளில் விளையாடி 7,226 ரன்களைக் குவித்ததுடன் 136 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 149 சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடி 3990 ரன்களும், 130 சர்வதேச டி20யில் விளையாடி 2897 ரன்களும் விளாசியுள்ள அவர், 7 சர்வதேச டெஸ்டில் களமிறங்கி 339 ரன்களையும் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி 2015, 2023 என இரண்டு ஒருநாள் உலகக் கோப்பைகளையும் ,2021 டி20 உலகக் கோப்பையையும் வெல்ல மேக்ஸ்வெல் முக்கியப் பங்காற்றியுள்ளார். 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மும்பையில் மேக்ஸ்வெல் ஆடிய இன்னிங்ஸ் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
292 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தவித்தது. அப்போது களத்திலிருந்த மேக்ஸ்வெல், தசைப்பிடிப்பால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையிலும், 128 பந்துகளில் 21 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்தார்.
ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை இதன் மூலம் மேக்ஸ்வெல் பெற்றார். பாட் கம்மின்ஸுடன் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 202 ரன்கள் கூட்டணி அமைத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெறச் செய்தார்.சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், மேக்ஸ்வெல் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார். பிக் பாஷ் லீக் 2026-27 பருவத்திற்காக மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியுடன் அவர் ஒப்பந்தத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications


